Wednesday, 15 January 2025

"வல்வை பட்டத் திருவிழா - 2025"

"வல்வை பட்டத் திருவிழா - 2025"


தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர். அவற்றில் "உயிர்த்தெழும் ராகன்" பட்டம் முதலாமிடத்தையும், "மின் பிறப்பாக்கி பட்டம்" இரண்டாம் இடத்தினையும் , "ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு" பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.










இன்றைய ராசிபலன் - 15.01.2025..!!!

இன்றைய ராசிபலன் - 15.01.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். பெருசாக எந்த பிரச்சனைக்கும் போக மாட்டீங்க. இன்றைய நாள் ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக செல்லும். வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும். பெருசாக பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் இன்று கைகூடி வரக்கூடிய நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியம் பேச்சுக்கள் மீண்டும் துடங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். குடும்பத்தோடு நிறைய நேரத்தை வெளியிடங்களுக்கு சென்று செலவு செய்வீர்கள். கூடவே கையில் இருக்கும் பணமும் செலவாகும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு சேர்ந்து இன்று உற்சாகமாக நேரத்தை கழிப்பீர்கள். சொந்த ஊர் சென்று இருப்பவர்களுக்கு இன்று 24 மணி நேரம் போதாது. பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். சுப செலவுகள் உண்டாகும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகளும் கவலைகளும் இருக்கும். இதனால் இன்றைக்கான வேலையை சரியாக செய்ய முடியாது. தேவையற்ற பிரச்சினைகளை தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு அன்றாட வேளையில் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் நீங்கும். பிரஷர் குறையும். உற்சாகத்தோடு உங்களுடைய வேலையை கவனிப்பீர்கள்‌. தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். புது ஐடியாக்களை அறிமுகம் செய்யலாம். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் இருக்கட்டும். வெளியிடங்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்றால் அவர்களை கவனமாக பாருங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடக்கூடிய நாளாக இருக்கும். நல்லது நடக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பார்ப்பீர்கள். குறிப்பாக விவசாயிகள் உழவர்கள், மாடு வைத்திருப்பவர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உங்களுடைய வியாபாரத்தில் புது விஷயங்களை அறிமுகப்படுத்தலாம். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த ஊர் சென்றவர்களுக்கு நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், பிரிந்த உறவுகளோடு நண்பர்களோடு சந்தோஷமான நேரம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு நேற்று பொங்கல் கொண்டாடி இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்கவும். உணவு கட்டுப்பாடு தேவை. தேவையற்ற நண்பர்களோடு சேர்ந்து தேவையற்ற பழக்கங்களை பின்பற்ற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நன்று.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் உண்டாக கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நண்பர்களோடு உறவுகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீண்ட நாள் பிரச்சனையை இன்று பேசி எந்த பஞ்சாயத்தும் செய்யாதீங்க. ஊருக்கு சென்ற வேலையை முடித்துக் கொண்டு, பழையபடி வேலைக்கு திரும்புவது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவன குறைவு இருக்கக் கூடாது. வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பண்டிகை நாளில் கணக்கு வழக்குகளை கவனிக்காமல் இருக்காதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி இருக்கும். உங்களிடம் வேலை செய்பவர்களை நீங்கள் சந்தோஷப்படுத்தி அழகு பார்ப்பீர்கள். பொங்கலுக்கு அவர்களுக்கு உண்டான மரியாதையை செய்து நன்றி தெரிவிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு தேவையான விஷயங்களை கொடுத்து சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி கொள்வீர்கள். முதலாளிகளுக்கு இன்று சுபம். தொழிலாளிகளுக்கு என்று மனநிறைவு.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற பகைமை உண்டாக வாய்ப்பு உள்ளது. வெளியிடங்களுக்கு சென்றால் உறவுகளைப் பார்த்தால் அந்த இடத்தில் அதிகம் பேசக்கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். தேவையற்ற பஞ்சாயத்துக்கள் செய்தால், உங்களுடைய மூக்கு உடையும் ஜாக்கிரதை.

Monday, 13 January 2025

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்..!!!

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்..!!!


யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17) புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னதாக மருத்துவ கட்டிடத்தொகுதியில் (நுழைவாயில் 6 முன்புறம்) செயல்பட்டு வந்த என்புமுறிவு சத்திரசிகிச்சை விடுதிகள், தற்போது நவீன வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய விடுதிகளில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகவும் இலகுவாக சிகிச்சை பெற முடியும்.

மற்றும் என்புமுறிவு நோயாளிகளை பார்வையிட வருவோர், வைத்தியசாலையின் நுழைவாயில் இலக்கம் 2A என குறிப்பிடப்பட்டுள்ள வழியாக வைத்தியசாலைக்குள் நுழையமுடியும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் வலதுபுறத்தில் அமைந்துள்ள மின் தூக்கி (elevator) மூலம் மேலே சென்று, குறித்த விடுதிகளில் உள்ள நோயாளியை பார்வையிடலாம்.

ஒரு நோயாளியை பார்வையிட, பார்வையிடும் நேரங்களில் ஒரே நேரத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிவுறுத்தலுக்கு இணங்க நோயாளிகளை பார்வையிட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழில். கச்சான் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு..!!!

யாழில். கச்சான் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணத்தில் கச்சான் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த சசிதரன் டானியா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கச்சானை உட்கொண்ட குழந்தை , இரவு தூங்க சென்ற நிலையில் , நள்ளிரவு வேளை திடீரென நித்திரையால் எழுந்து மூச்சு விட சிரமப்பட்டு , அழுதுள்ளது.

அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் போது சுவாச குழாய்க்குள் கச்சான் முத்து ஒன்று சென்றமையாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

Saturday, 11 January 2025

வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை தொடரும்; வெளியான அறிவிப்பு..!!!

வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை தொடரும்; வெளியான அறிவிப்பு..!!!



வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கும் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று(11) மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வங்காள விரிகுடாவில் கடந்த 07 ஆம் திகதி அன்று உருவாகிய காற்றுச் சுழற்சியின் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது.

இதன் காரணமாக மழை நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே,தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பாக 07ஆம் திகதி யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி, 08 ஆம் திகதி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை,9 ஆம் திகதி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு 10 ஆம் திகதி வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு கிடைத்த மழை, இன்று மாலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலடையும்.

அதேவேளை மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே அறுவடைச் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

வடக்கு, கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு கடற்பகுதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகரெட் மற்றும் மதுபானங்கள் விலை அதிகரிப்பு..!!!

சிகரெட் மற்றும் மதுபானங்கள் விலை அதிகரிப்பு..!!!


இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6% வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான வரி வெவ்வேறு கட்டங்களின் கீழ் திருத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று முதல் அமுலாகும் வகையில் சிகரெட் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 4 கட்டங்களின் கீழ் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாயினாலும், 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.