வேலணையில் தனது மாட்டினை மீட்க கொட்டும் மழைக்குள்ளும் போராடிய பெண்..!!!
பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சாப்பிட்டதாக பிரதேச சபையினால் பிடித்து கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டினை , மாட்டின் உரிமையாளரான பெண் கொட்டும் மழைக்குள் போராட்டம் நடாத்தி, 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்தி மாட்டினை மீட்டு சென்றுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் உப அலுவலக வளாகத்தினுள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உட்புகுந்த பசுமாடு ஒன்று , வாளகத்தில் இருந்த தாவரங்களை சாப்பிட்டு , அவற்றை சேதப்படுத்தியுள்ளது.
அதனை அவதானித்த பிரதேச சபை ஊழியர்கள் குறித்த பசுமாட்டை பிடித்து , பிரதேச சபை வளாகத்தில் கட்டி வைத்து பராமரித்து வந்துள்ளனர்.
தனது பசுமாட்டினை காணாது தேடி வந்த பெண் , மாடு பிரதேச சபை உத்தியோகஸ்தர்களால் பிடித்து பிரதேச சபையில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக அறிந்து தனது மாட்டினை தருமாறு உரிமைகோரியுள்ளார்.
அதன் போது, மாட்டினை விடுவிப்பதற்கு தண்டப்பணத்துடன் , பராமரிப்பு செலவு உள்ளடங்கலாக 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்துமாறு பிரதேச சபையினர் கூறியுள்ளனர்.
பணம் செலுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்து, வேலணை பிரதேச செயலகத்திற்கு சென்று கொட்டும் மழைக்குள் மத்தியில் நின்று , தனது பசுமாட்டை பிரதேச சபையிடம் இருந்து மீட்டு தருமாறு கோரி பிரதேச செயலக பிரதான வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன் போது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , பிரதேச சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள் , உள்ளூராட்சி சபை சட்டங்களின் அடிப்படையில் தான் அவர்கள் மாட்டினை பிடித்து வைத்துள்ளார்கள். எனவே தண்ட பணத்தினை செலுத்தி மாட்டை மீட்டு செல்லுங்கள் என அறிவுறுத்தி பிரதேச சபைக்கு அனுப்பி வைத்தனர்.
மீண்டும் பிரதேச சபைக்கு சென்ற மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையில் 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்தி , தனது மாட்டினை மீட்டு சென்றுள்ளார்.