''ஜனாதிபதி அனுரகுமாரவின் விசேட அழைப்பின்பேரில்தான் இலங்கை வந்தேன்'' என்ற வசனத்தை ,தனது உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பித்த நேரம் முதல், பயன்படுத்திக்கொண்டிருந்தார் மோடி... எத்தனை பேர் அதனை கவனித்தார்களோ தெரியவில்லை.
தேர்தல் நேரம் மோடியை இங்கே கொண்டுவந்தது தேவையில்லாத வேலை என்று ஜனாதிபதி மீதே அவரது கட்சிக்காரர்கள் அதிருப்தி வெளியிட்ட நேரத்தில் , ஜனாதிபதியின் அழைப்பினை அடிக்கடி நினைவுபடுத்தி மோடி பதிவுகளை இட்டதில் சூட்சுமம் இருக்கிறது..
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இரண்டு தரப்புகள் இருக்கின்றன என்பது மோடி விஜயத்தில் அம்பலமாகியிருக்கிறது. சிலவேளை அதனை அம்பலப்படுத்தவே மோடி இந்தப் பயணத்தை இவ்வளவு விரைவாக ,அதுவும் தேர்தலுக்கு முன்னர் மேற்கொண்டாரோ தெரியவில்லை..
மோடியை வரவேற்கும் நிகழ்வில் சபாநாயகர் உட்பட்ட முக்கிய அமைச்சர்களை காணவில்லை.. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பிரதமர் ஹரிணி கூட தனது வெளிநாட்டுப்பயணத்தை இடைநடுவில் நிறுத்திவிட்டு ஓடோடி வந்ததுகூட ,ஆளுங்கட்சிக்குள் இருக்கும் பிளவை வெளித்தெரியாமல் மறைப்பதற்காகத்தான் இருக்கும்.இல்லையேல் பிரதமர் உட்பட்ட முக்கிய அமைச்சர்கள் வரவேற்பில் இல்லாமல் இருந்தமை பகிரங்கமாக தெரிந்திருக்கும்.
ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக மேடைகளில் முழங்கித்தள்ளிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் காணொளியொன்று பட்டி தொட்டியெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது.அப்படி முழங்கித் தள்ளிவிட்டு எந்த முகத்தில் அவரை வரவேற்பது என்ற கேள்வி ஜே .வி.பி அமைச்சர்மாரை ஆட்கொண்டிருக்கும் என்பதால் அவர்கள் போயிருக்க மாட்டார்கள். ஆனால் எதிர்க்கட்சியில் இருந்தபோது , இவ்வளவு விரைவாக ஆட்சியதிகாரம் கிடைக்காதென கருதிய ஜே .வி.பியின் AI வெர்ஷன் தேசிய மக்கள் சக்தி, குயிக்காக தன்னை பக்குவப்படுத்தி இந்த விஜயத்தை சமாளித்துக்கொண்டது.தற்காலிகமாக.
சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி , அதானியின் கொழும்புமேற்கு துறைமுக அபிவிருத்தி ,திருகோணமலை துறைமுக மேம்பாடு குறித்தும் அதன் அறிவிப்பை இந்திய பிரதமர் வரும்போது வெளியிடலாமென்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டபோது அவற்றையெல்லாம் நிராகரித்து ,அப்படிச் செய்யமுடியாதென கூறி அந்த கூட்டத்தில் இருந்தே வெளியேறியிருந்தார் ஜே .வி.பி அமைச்சர் ஒருவர்.. ஜனாதிபதியே கையறு நிலையில் தான் அப்போது இருந்தார்... இப்போதும் அப்படியே..
இன்று நாடொன்றின் பிரதமரையே கூடி நின்று வரவேற்கமுடியாத நிலைமை. சிலசமயம் சீனாவை சமாளிக்க இந்த யுக்தியை இந்த அரசு கையாண்டிருந்தாலும் கூட , அது மதிநுட்பமற்ற மோசமான இராஜதந்திரமே ..
இன்றைய நிகழ்வுகளை நோக்குகையில் இலங்கையின் பாராளுமன்ற அதிகாரம் சீனாவின் கைகளில் தான் இருக்கிறதென்பது தெளிவாகிறது.அப்படியான நிலையில், இலங்கையின் இந்தியாவின் எதிர்காலத் திட்டங்கள் என்னாகும் என்பதனைக் கூட உணராமலா இருக்கும் புதுடில்லி?
இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அதற்காக உயிர்களை இழந்து ,கொலைகளை செய்த ஒரு இயக்கத்தின் தலைமை இப்படியா நடந்துகொள்வது? என்ற கேள்வியை ஜே .வி.பி எழுப்பத் தொடங்கியிருக்கிறது.இந்த முரண் உடனடியாக முடிவடையும் முரண் அல்ல.இதுதான் ஆரம்பம். அதனை தாரை தப்பட்டையுடன் ஆரம்பித்து வைத்திருக்கிறது மோடியின் விஜயம்.
Siva Ramasamy