யாழில் மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதி தப்பிச்சென்ற பெண்..!!!
பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு , சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
விபத்தில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவன் காயங்களுக்கு உள்ளான நிலையில் , கை முறிந்த நிலையில் , சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த மாணவன் தனது பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை , பாடசாலைக்கு அருகில் , மாணவனுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணொருவர் மோதி , விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
விபத்தில் மாணவன் கீழே விழுந்த போது , அப்பெண் தனது மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் இருந்து எடுத்துக்கொண்டு , அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
விபத்துக்கு உள்ளான மாணவனை , சிரேஸ்ட மாணவர்கள் மீட்டு , பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்ததை அடுத்து , ஆசிரியர்களால் மாணவன் சங்கானை வைத்தியசாலையில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , தப்பி சென்ற பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை , பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரத்தில் பாடசாலைக்கு அருகில் வீடு போக்குவரத்து கடமையில் வட்டுக்கோட்டை பொலிஸார் ஈடுபட்டு வந்ததாகவும் , பாடசாலை விடுமுறை விட்டு மீள திங்கட்கிழமை முதல் ஆரம்பமான நிலையில் , பொலிஸார் கடமையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.