Monday, 14 April 2025

'விஸ்வாவசு' தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2025

SHARE

ஒவ்வொருவரது வாழ்விலும் வசந்தங்களை அள்ளித் தருவதில் தமிழ் புத்தாண்டுக்கு சிறப்பான பங்களிப்பு இருக்கிறது. ஆங்கில புத்தாண்டை விட தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதில் எமக்கு ஆன்மீக ரீதியாகவும், சோதிட ரீதியாகவும் சுப பலன்கள் அதிகம். எனவே, 13ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்பும், 14ஆம் திகதி அதிகாலையிலும் விஸ்வாவசு எனும் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

இந்த புத்தாண்டில் விவசாயம் பெருகும். பசு மாடும் ஆடும் நல்ல பலன்களை தரும். பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தில் சுகவீனங்கள் ஏற்படும். மக்கள் நலமாக வாழ்வதுடன் அவர்களின் வாழ்க்கைத் தரம் சற்று உயரும். மழை நன்கு பொழியும் என்பது பொதுவான பலன். இருப்பினும் இந்த புத்தாண்டில் பன்னிரண்டு ராசிகளுக்கான பலன்களை காண்போம்.

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பலன்கள் அனைத்தும் இந்த ஆண்டில் நடைபெறும் ராகு- கேது பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியைத் துல்லியமாக அவதானித்து வழங்கப்பட்டிருக்கிறது.

மேஷம்

வேகமும் விவேகமும் கொண்ட மேஷ ராசி வாசகர்களே!

கடந்த ஆண்டில் இருந்த அலைச்சல்கள் மற்றும் சங்கடங்கள் குறையும். வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. சிலர் புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். என்றாலும் கூட்டு தொழிலில் ஈடுபடுவதற்கும் முன்பும், புதிய தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பும் எச்சரிக்கையும், கவனமும் தேவை. குறிப்பாக அதிக முதலீடு என்றால் எச்சரிக்கை தேவை.

மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகலாம்.

திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு பொருத்தமான வாய்ப்பு வரன் தேடி வந்து அமையும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு நூறு சதவீத முயற்சிகள் வெற்றியைத் தரும்.முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்கள் இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்.

உணவு விடயங்களில் கட்டுப்பாடு அவசியம் இல்லையெனில்.. சுகவீனம் அடிக்கடி ஏற்படலாம். வெளியிடங்களில் பசியாறுவதை தவிர்க்கலாம்.

பிள்ளைகளால் சில தருணங்களில் சங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு இதன் காரணமாக மன குழப்பமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இதனால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். கனிவாகவும், இனிமையாகவும் பேசுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.தந்தை வழியிலான பூர்வீக சொத்துக்கள் விடயத்தில் சுமுகமான அணுகுமுறை பலன் தரும்.புதிதாக காணி வாங்கி வீடு கட்டுவதை விட , ஐந்தாண்டுகளுக்கு உட்பட்ட கட்டிய வீட்டை வாங்குவது சிறப்பு.

பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் இணையக் கூடும்.தன வரவு பெருகும். கூடுதலாக வரும் வருவாயை சேமிக்க தொடங்குங்கள். ஆனால் பேராசை காரணமாக ஆடம்பர செலவுகளை செய்வதற்கு மனம் தூண்டும். அதற்கு கடிவாளம் போட்டு சேமித்தால்.. பிறகு பலன் கிடைக்கும்.சனி உங்களுக்கு சாதகமாக செயல்படுவதால் நேர்மையை முழுவதுமாக கடைப்பிடித்தால் லாபம் உண்டு.

விளையாட்டுத்துறை, கலைத்துறை சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகளும், வெற்றியும் கிடைக்கும். புனித யாத்திரை, குருமார்களின் சந்திப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சனியும், ராகுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குறைகள் நீங்கும். ஆனால் தங்க நகையை வாங்குவதில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்

விநாயகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு, சூரியன் வழிபாடு நன்மையைத் தரும். சனிக்கிழமைகளில் பைரவரையும் சிவபெருமானையும் வில்வ இலை கொண்டு வணங்குவதால் பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கோதுமையால் தயாரிக்கப்பட்ட உணவை தானம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

விவேகமும் உறுதியான மனநிலையும் கொண்ட ரிஷப ராசி வாசகர்களே!

தமிழ் புத்தாண்டு முதல் உங்களுடைய வாழ்க்கையில் இதற்கு முன்னர் நீடித்து வந்த துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். பெண்களால் ஆதாயம் உண்டு. பித்ரு தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கும். திருமண வாய்ப்பு கைகூடும். சிலருக்கு மறுமணமும் நிகழும். கணவன் - மனைவி உறவில் இணக்கம் நீடிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும், யோகமும் கிட்டும்.

பதவி மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், இடமாற்றம் ஆகியவை ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். ஆனால் உங்களிடம் இருக்கும் முன் கோபத்தை தவிர்க்க வேண்டும். முன்கோபம் காரணமாக உச்சரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை.

தாயாரின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். சொத்துக்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிள்ளைகள் தவறான பாதையில் பயணிப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதால் அவர்களை கண்காணிப்பதில் கவனம் கொள்ள வேண்டும். அரசாங்க பணியும், அரசாங்கத்தின் அனுசரணையும் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தந்தையின் தொழிலை மேற்கொள்வதன் மூலம் கூடுதல் ஆதாயம் அடையலாம்.

முடிவுகளை எடுப்பதற்கு முன் குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டும். குறிப்பாக தாயாரிடம் ஆலோசனை பெறுவதும், பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதும் நன்மை பயக்கும்.

சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், வாடிக்கையாளர் சேவை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரமும் கௌரவமும் கிடைக்கும். குறிப்பாக குரு பெயர்ச்சிக்குப் பின் சிறந்த பலன்கள் உண்டு.தொழிலில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களுக்கு வெளிநாடு தொடர்புகள் மூலம் அமோகமான இலாபம் கிடைக்கும். வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவின் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு திருமணம் சார்ந்த எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆபரண சேர்க்கை உண்டு. கடன் சுமை குறையும்.

பரிகாரம்

செவ்வாய், வியாழன், சஷ்டி, கிருத்திகை, விசாகம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியரின் வழிபாடு - வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் வழிபாடு சிறந்த பலனை தரும். மயிலின் திருவுருவ புகைப்படம் அல்லது மயிலிறகு ஆகியவற்றை எப்போதும் உடன் வைத்திருப்பது சாதகமான பலனைத் தரும். நீர்மோர் தானம் செய்வதும், ஏழை எளிய பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தல் சார்ந்த உபகரண பொருட்களை தானமாக வழங்குவதும் கூடுதல் பலனை வழங்கும்.

மிதுனம்

புத்தி சாதூரியமும் வாக்கு வன்மையும் கொண்ட மிதுன ராசி வாசகர்களே!

இந்த ஆண்டில் உணவு பழக்கவழக்க விடயத்தில் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துங்கள். அப்போதுதான் ஆரோக்கியம் உண்டாகும். பேச்சிலும் நிதானம் தேவை. பெற்றோர்களின் உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். குரு பெயர்ச்சிக்குப் பிறகு திருமண யோகம் - புத்திர பேறு உண்டு. சிலருக்கு காதல் திருமணமும் நடக்கும். சகோதர, சகோதரிகளுடன் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சுமுகமாக உறவை பேண வேண்டும்.

ஜென்ம குருவால் சிறிய அளவிலான அவமானத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் கவனத்துடனும் இருக்க வேண்டும். குறிப்பாக பயணத்தின்போது அறிமுகமற்ற நபர்களால் கவனம் சிதறக்கூடும்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கணவன் - மனைவி இடையேயான விரிசல் மறைந்து, ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டாகும். தந்தை வழி சொத்து கிடைக்கும். சிலருக்கு அந்த சொத்தின் மீதான ஆதாயம் கிடைக்கும். காணி தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு சனி, ராகு இணைவதன் காரணமாக தந்தை வழி சொத்துக்கள் கிடைப்பதில் ஆதாயம் குறையக்கூடும்.

உயர்கல்வி தொடர்பாக பலர் வெளிநாட்டு வெளிநாடுகளுக்கு செல்வர். வெளிநாடு பயணத்தின் மூலம் லாபம் உண்டு. தொழிலில் முன்னேற்றம் இருந்தாலும் அதிக முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.

மனச்சோர்வு ஏற்படும். அதனால் ஆரோக்கியமான சிந்தனைகளை மட்டும் பின்பற்றவும். எழுத்து துறை, ஓவியத்துறை ஆகியவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றியும், அங்கீகாரமும் கிடைக்கும்.

மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம். கல்லூரி தேர்வுகளில் மாணவ மாணவிகள் பொறுப்புடன் எழுதினால் சித்தி அடைவது உறுதி.உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் உண்டு. இதனை ஏற்றுக் கொள்ளாமல் பணி விலகினால் புதிய வேலையும் கிடைக்கும்.கலைத்துறை சார்ந்தவர்கள் குறிப்பாக கமெரா கலைஞர்கள் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய வழிபாடு - நடராஜர் வழிபாடு - கால பைரவர் வழிபாடு நன்மையை பெற்று தரும். வியாழக்கிழமைகளில் பிள்ளைகளுக்கு இனிப்புகளை வாங்கி தர வேண்டும்.இந்த ஆண்டு முழுவதும் பௌர்ணமியில் விரதம் இருப்பது நன்மையை தரும். கடைநிலை ஊழியர்களுக்கு புதிய காலணிகளை தானமாக வழங்கினால் சிறப்பான பலனை பெறலாம்.

கடகம்

கருணை உள்ளமும் புத்திக்கூர்மையும் கொண்ட கடக ராசி வாசகர்களே!

இனி வெற்றிப் பாதையில் பயணிக்கும் காலம் தொடங்கியிருக்கிறது. கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பதை மட்டும் மனதில் உறுதியாகக் கொண்டு செயற்பட்டால், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால், அவர்களை தெரிவு செய்வதில் கவனம் தேவை. வீட்டை புனரமைத்து அழகுபடுத்தும் வேலையை செய்வதற்கு விரும்புவீர்கள். அதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சுப நிகழ்வுகளுக்கான செலவுகளில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் முன்கூட்டியே திட்டமிடல் அவசியம். குடும்ப உறவுகளுக்குள் வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். அதனால் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை.

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் கெடுப்பிடியும் அழுத்தமும் குறையும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக வங்கிக் கடன் கேட்டால் கிடைக்கும். வாகன ஏற்பாட்டாளர் தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். பயனற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கும் லாபம் உண்டு.

ஆரோக்கியம் தொடர்பான விடயத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். குறிப்பாக இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பிறகு குணமடையும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படலாம். முறையான பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். சிலருக்கு ஜீரண மண்டலத்தில் தொல்லைகள் ஏற்படலாம். அதனால் உணவு விடயத்தில் எச்சரிக்கை தேவை.

கணவன் - மனைவி உறவில் சுமுகமான உறவு நீடிக்கும். சில அந்தரங்க சிக்கல்களுக்கு பொருத்தமான தீர்வு கிடைக்கும். சிலருக்கு மனக்குழப்பம் ஏற்படலாம். தாழ்வு மனப்பான்மையும் உண்டாகும். இதனை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஏனெனில், இதுவே ஆளுமை தொடர்பான பிரச்சினையை உண்டாக்கிவிடும்.

வேற்று மொழி பேசும் நபர்களால் லாபம் உண்டு. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டமும் ஏற்படும். பிணயம் இடுவதை தவிர்க்க வேண்டும்.

சுப விரயம் ஏற்படும் என்பதால் செலவுகளை அல்லது வருவாயை சுபச் செலவாக மாற்றிக் கொள்ளலாம். சிலருக்கு சேமிப்புகள் கரையும். சேமிப்புகளை பாவிப்பதில் எச்சரிக்கை தேவை. ராசை பல தருணங்களில் உங்களை ஆக்கிரமிக்கும். அதற்கு ஒருபோதும் இணங்கிவிடாதீர்கள். கஷ்டப்பட்டு தான் அதனை கடக்க வேண்டியது இருக்கும்.

விளையாட்டுத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகும். சில தருணங்களில் அவமானத்தை எதிர்கொள்ள நேரிடும். அதனால் முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். லருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் உண்டாகும். இதனால் யாருக்கு வாக்கு கொடுத்தாலும், கொடுப்பதற்கு முன் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.

பரிகாரம்

புதன்கிழமைகளில் மகா விஷ்ணுவையும், வியாழக்கிழமைகளில் நவகிரக குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்தியையும், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சுப்பிரமணியரையும் வழிபட வேண்டும்.

திங்கட்கிழமையில் காலை 6 மணிக்குள் அரச மரத்து அடியில் சிறிது நேரம் அமர்ந்து தியான பயிற்சி மேற்கொள்வதும் அல்லது அமைதியாக உட்கார்ந்து இருப்பதும் அல்லது விநாயகரை 21 வரை வலம் வருவதும் நன்மை பயக்கும். அருகில் இருக்கும் புற்றுக்கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபடுவதும், கோதுமையால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை தானம் செய்வதும், தந்தையிடம் ஆசி பெறுவதும் நினைத்த காரியங்களில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

சிம்மம்

தைரியமும் ற்சாகமும் தன்னம்பிக்கையும் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே!

சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை ஏற்படுத்தக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு திகழும். இதற்கு முன் கிடைத்திடாத ஞானம் கிடைக்கும். புதிதாய் நம்பிக்கை பிறக்கும். தொழிலதிபர்கள் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் முதலீடு செய்வது லாபத்தை பெற்றுத் தரும். அதே தருணத்தில் முதலீட்டை உங்களது சேமிப்பிலிருந்து தர வேண்டாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு பணி சுமை அதிகரிக்கும் என்பதால் கவனத்துடன் செயற்பட வேண்டும். வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் உண்டு. ஆசிரியர் துறையில் பணியாற்றுபவர்கள் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது உயர்வை தரும். இசைத்துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கிறது.

தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சிலருக்கு சுகவீனம் ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு குணமடைவார்கள். வாகனத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம். திருமண வரன் கைகூடும். சிலருக்கு மாற்று இனத்தில் திருமண பேச்சுவார்த்தை வெற்றி தரும். புத்திர பாக்கியமும் கிடைக்கும். சிலர் குழந்தையை தத்தெடுக்க விரும்புவர். அதற்கான நடைமுறை தற்போது சாத்தியமாகும். பண வரவில் திடீர் அதிர்ஷ்டம் உண்டு.

சிம்ம ராசிக்கு ஏழாமிடத்தில் சனி இருப்பதால் நன்மைகள் அதிகம் இருக்காது. எதிலும் கவனமாக இருங்கள். யார் மீதும் முழுமையான நம்பிக்கையை வைக்காதீர்கள். மனைவிக்காக கடன் வாங்க நேரிடும். இது நாளடைவில் உங்களுக்குள் விரிசலை உண்டாக்கிவிடும். அதனால் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.கேது பகவான் மனக்குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அதன் மூலமாக சிறந்த அனுபவத்தையும் கொடுத்திடுவார். பெண்கள் தங்க நகைகளை சேர்த்தாலும் கணவரிடம் கவனமுடனும் கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

பரிகாரம்

திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் சண்முகரின் வழிபாடும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜீவ சமாதி வழிபாடும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடும் சிறந்த நன்மையை தரும். மலை மீது இருக்கும் ஆலயத்தை வழிபடுவதும் பாம்பன் சுவாமிகள் வழிபாடும் சிறப்பு தரும். கிறித்தவ மதத்தினருக்கு உதவி செய்தாலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். வியாழக்கிழமைகளில் எலுமிச்சை சாதத்தை தானமாக வழங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும்.

கன்னி

சுறுசுறுப்பும் உற்சாகமும் மிகுந்த கன்னி ராசி வாசகர்களே!

கடந்த ஆண்டில் செய்யாத தவறுக்கு அவமானத்தையும் தண்டனையையும் பெற்றிருப்பீர்கள். ஆனால், இந்த ஆண்டு மாற்றங்கள் உண்டு. தொட்டதெல்லாம் நல்ல பலனை வழங்கும். ஆரோக்கியம் மேம்படும். நோய் தாக்கம் குறையும். மனக்குழப்பம் விலகி, தெளிவான சிந்தனை உதயமாகும். முடிவெடுக்கும் திறன் துல்லியமாக இருக்கும். பண வரவுகள் திருப்தியைத் தரும். தொழிலில் இருந்து வந்த தடை மறையும்.

சிலருக்கு தொழிலில் இடமாற்றமோ அல்லது தொழில் மாற்றமோ ஏற்படலாம். தொழிலில் மனைவியை பங்குதாரராக இணைத்துக்கொள்வதும் நன்மையை தரும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய திட்டங்கள் சாத்தியமாகும். கனிவான, தன்மையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள்.

சிலருக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். உறவுகளில் ஏற்பட்ட பிரிவுகள் மறைந்து தற்போது சொந்தங்கள் வீடு தேடி வரும். சிலருக்கு எதிரிகள் நண்பர் ஆகிவிடுவார்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும். இதற்காக வங்கியில் கடன் கேட்டிருந்தால் அது சாதகமான அம்சமாக மாறும். சிலர் பழைய வாகனத்தை விற்று, புதிய வாகனத்தை வாங்குவர். சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டு. சிலர் புதிதாக சேமிப்புகளை தொடங்குவார்கள். சுப நிகழ்வுகளில் ஏற்பட்ட தடை நீங்கும். இளைய சகோதர சகோதரிகளின் மூலம் சாதகமான பலன்களை பெறலாம்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும், சங்கர நாராயணரை வழிபடுவதும் சிறப்பு. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும் சிறப்பு. திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலையை சாற்றி வழிபடுவதும் சாதகமான பலன்களை தரும். ஏழை எளிய மணமக்களுக்கு திருமண செலவிற்கு உதவி செய்வது நன்மையை தரும் . வீதியோரங்களில் வசிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையிலான வஸ்திரத்தை தானமாக வழங்கினால் நினைத்த காரியம் ஈடேறும்.

துலாம்

பாசமும் அக்கறையும் அதிகம் கொண்ட துலாம் ராசி வாசகர்களே!

இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த புத்தாண்டு முதல் விலகும் . இந்த ஆண்டு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வரும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக மனம் சார்ந்த போராட்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். குரு பெயர்ச்சிக்குப் பிறகு வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். கலை துறையில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும்.

அழகு நிலையம் வைத்திருப்பவர்கள்- அழகு சாதன பொருட்களை விற்பனை செய்பவர்கள் - ஆடை உற்பத்தி- நிதி நிர்வாகம் - சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு. தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, செய்தி துறை போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். பெண்களும் தொழில் துறையில் முன்னேற்றம் அடைவர். அதிக அளவில் முதலீடு செய்து தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்தி லாபம் பெறுவீர்கள். சிலருக்கு எதிரிகளை வெல்லும் சூட்சமம் தெரியவரும். ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சினைகள் சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ந்துவிடும். வெளிநாட்டு தொடர்பின் மூலம் பாரிய பலனை அடையலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து பேசவும் வார்த்தைகளில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். சரியான வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். தவறான வார்த்தைகளும், தடித்த வார்த்தைகளும் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கி விடும். கணவன் - மனைவி உறவில் ஒற்றுமை மேலோங்கும்.

ராகு பகவானின் அருளால் வேற்று மத காதல் திருமணங்கள் நடைபெறும். மாணவ மாணவிகள் கடின உழைப்பின் மூலம் தேர்வுகளில் அதிக பெறுபேறு பெற்று சித்தியடைவார்கள். சிலருக்கு குறுந்தூர பயணம் பலன் அளிக்கும். புனித யாத்திரை, ஆன்மிக சுற்றுலா, ஆலய சுற்றுலா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் வைத்திய நிபுணர்களின் ஆலோசனை இன்றி எந்த மருந்தினையும் உட்கொள்ள வேண்டாம். ஓய்வு அவசியம். தன வரவில் தாராளம் உண்டு.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் நரசிம்மர் வழிபாடு, வனதுர்க்கை அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு. கடைநிலை ஊழியர்களுக்கு காலணி தானமாக தருவது, கல்வி கற்பதில் தடை ஏற்பட்டவர்களுக்கு உதவி அளிப்பது, வேற்று மதத்தினருக்கு உதவி செய்வது உங்களுக்கான சாதகமான பலன்களை வழங்கும்.

விருச்சிகம்

அனைத்து விடயங்களிலும் தீவிரமாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் உற்சாகமான ஆண்டு. மனம் தெளிவு பெறும். வெற்றிக்கான புத்தாக்க சிந்தனை பிறக்கும். உங்களது உள்ளுணர்வை துல்லியமாக அவதானிப்பீர்கள். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் நலம் விரும்பிகள், நண்பர்கள் ஆகியோரிடம் ஆலோசனை கேட்பது நலம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வ வழிபாட்டுக்கான வாய்ப்பு கிடைக்கும்.

தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். சிலருக்கு புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். சிலருக்கு வாகன யோகம் உண்டு. தாயின் உடல்நலம் மேம்பட்டு மகிழ்ச்சியை தரும். சொத்து விடயங்களில் சுமுகமான தீர்ப்பு கிடைக்கும். யாருக்கும் பிணையம் இட வேண்டாம். ஆலோசனையும் சொல்ல வேண்டாம். அறிவுரையையும் கூற வேண்டாம்.

திடீர் அதிர்ஷ்டங்கள் கைகூடும் என்றாலும் இறுதி வரை எச்சரிக்கை தேவை. வெளிநாட்டு தொடர்பின் மூலம் அல்லது வெளிநாட்டு நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிட்டும். திருமண தடை அகன்று இல்லறத்தில் அடி எடுத்து வைப்பீர். அதிக அன்பின் காரணமாக தம்பதிகளிடையே விரிசல் ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வதுதான் சிறப்பு.

எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு பதார்த்தங்களை பசியாறுவதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு தன வரவு வந்தவுடன் அதற்கான செலவும் சேர்ந்தே வரும். இதனால் கவனமுடன் திட்டமிட்டு கடன் வாங்காமல் செலவு செய்யுங்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால் லாபம் உண்டு என்றாலும் கூட்டாளியை கவனமுடன் தெரிவு செய்ய வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு தான். வழக்கம்போல் கவனத்துடன் செயற்பட்டால் தேர்வுகளில் சித்தி அடைவது உறுதி.

பரிகாரம்

பௌர்ணமி பூஜையில் பங்குபற்றுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவதும் தனி சிறப்பு. தர்ம சாஸ்தாவை வணங்குவதும், துளசிச் செடியை பதியமிட்டு வழிபடுவதும் உரிய பலன்களை உரிய தருணத்தில் பெற்று தரும். தாயிடம் ஆசி பெறுவதும் அல்லது தாயை போன்ற பெண்மணிகளிடத்தில் ஆசி பெறுவதும் வளர்ச்சியை தரும்.

தனுசு

எந்தத் துன்பம் வந்தபோதும் துவண்டுவிடாத தனுசு ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு நற்பலன்கள் அதிகமாகவும், கெடு பலன்கள் குறைவாகவும் ஏற்படும் ஆண்டாக இருக்கிறது. நல்ல சிந்தனை, ஆற்றல், உடல் ஆரோக்கியம், புதிய முயற்சிகள், வெற்றி, தன வரவு, சுபீட்சம்... என இந்த ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கிறது. இதன் காரணமாக பலருக்கு திருமண தடை விலகும். சிலருக்கு சொத்துள்ள மனைவியும் சிலருக்கு சொத்துள்ள கணவனும் கிடைப்பார்கள். சகோதரர்களின் வழிகாட்டல் கிடைத்து சாதனை படைப்பீர்கள்.

சில தடைகளுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். புது வீடு, புது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். சொத்து வாங்கும்போது அதற்குரிய ஆவணங்களில் முழு கவனம் செலுத்துவது சிறப்பு. குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்லும்போது நீங்கள் வாகனத்தை இயக்காமல் சாரதியை வைத்துக்கொள்வது விபத்துகளை தவிர்த்துக்கொள்ளலாம். தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மனக் குழப்பத்துக்கு அடிக்கடி ஆளாகுவார்கள். நினைவுத்திறன் இழப்பு விடயங்களிலும் ஆளாக கூடும். அதனால் முறையான மருத்துவ பரிசோதனை அவசியம். சிலர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சனை முழுதாக விலகும். சேமிப்பினை தொடங்குவீர். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவீர்.

புதிய தொழிலை தொடங்கலாம். நண்பர்கள்- கூட்டாளிகள் மூலம் இணைந்தும் தொழில் செய்யலாம். மனைவியின் பெயரில் தொழில் செய்யலாம். தொழிலில் லாபம் உண்டு. மூத்த சகோதரிகளுக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு மறுமணமும் கைகூடும்..

பரிகாரம்

சரஸ்வதி தேவி, சிவபெருமான், சூரிய பகவான் ஆகியோரை வழிபடுவது சிறப்பு . செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, வெட்டிவேர் மாலையை அணிவித்து வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும். கோயில்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு வஸ்திர தானம் செய்வதும் நல்ல பலனை வழங்கும்.

மகரம்

மனோதிடம் படைத்தவர்களும் சகிப்புத்தன்மை கொண்டவர்களுமான மகர ராசி வாசகர்களே!

கடந்த ஆண்டு வரை அவமானம், பொருள் இழப்பு, விவரிக்க இயலாத துன்பம் ஆகியவற்றை அனுபவித்த உங்களுக்கு இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையவிருக்கிறது. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கட்டுப்பாடுகளுக்கு அடங்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். உடலில் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். உடற்பயிற்சி, நடை பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இவற்றில் கவனம் செலுத்தினால் பாரிய பாதிப்பு ஏற்படாது.

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சில் கவனம் இருக்கட்டும். குறைவான பேச்சு ஆதாயம் தரும். தந்தையுடனான கருத்து வேறுபாடு மறையும் . தாயின் உடல்நிலையில் ஆரோக்கியம் மேம்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மாமன் உறவின் சிக்கலும் விரிசலும் ஏற்படக்கூடும். தந்தை வழி மாமன் உறவுகள் கை கொடுக்கும்.

மனைவி மூலம் சொத்து கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மகப்பேறும் கிடைக்கும். கடன் சுமை குறையும். இதனால் சேமிப்பு உயரும். வீடு காணி வாங்கும் யோகம் உண்டு. தங்க நகை ஆபரணங்கள் சேரும். சிலருக்கு திருமண பாக்கியம் ஒரே மாதத்தில் நிறைவேறும். மாணவர்கள் கல்வி கற்பதில் கூடுதல் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

சுய தொழில் செய்யும் பெண்மணிகள் ஒன்லைன் விற்பனை மூலம் லாபத்தை பெறுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். குலதெய்வத்தை வழிபடுவதற்கும், புனித யாத்திரை சென்று நீராடுவதற்குமான வாய்ப்பும் கிடைக்கும். நாளாந்தம் உறங்கும் பழக்கத்தை உறுதியாக கடைப்பிடித்தால் மன அழுத்தம் குறைந்து உற்சாகமாக பணியாற்றுவீர்கள்.

கட்டுப்பாடும் கவனமும் இருந்தால் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் உண்டு.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் நாராயணர் வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு, காவல் தெய்வ வழிபாடு சிறப்பை தரும். திங்கட்கிழமைகளில் அபிராமி அந்தாதியை வாசித்து வர, நினைத்த காரியம் நிறைவேறும். அவல் உணவை மனம் சார்ந்த பிரச்சினைகளுடன் உள்ள நோயாளிகளுக்கு தானமாக தருவதால் நல்ல பலன்களைப் பெறலாம்.

கும்பம்

பொறுமையும் நிதானமும் மிக்க கும்ப ராசி வாசகர்களே!

உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும் ஆண்டு இது. தெய்வ அனுகூலம் கிடைக்க பெறுவதால் இது சாத்தியமாகும்.பொறுமையுடன் எந்த காரியத்தில் ஈடுபடுகிறீர்களோ... அந்த காரியத்தில் உறுதியாக வெற்றியை பெறுவீர்கள். குலதெய்வத்தின் பரிபூரண அருள் உங்களுக்கு உண்டு. இதன் காரணமாக மன சஞ்சலம் அகலும். பண வரவு திருப்தியாக இருக்கும். உங்களின் லட்சியங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றக்கூடிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி உறுதி.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். உடற்பயிற்சி, நடை பயிற்சி, உணவு கட்டுப்பாடு இந்த மூன்று விடயத்தையும் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

குடும்பத்தில் நடைபெறும் சுப வைபவங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.சிலருக்கு திருமண தடை ஏற்படும் . சுய ஜாதகத்தின் அடிப்படையில் பரிகாரங்களை மேற்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். தாயார் வழியில் ஆதாயம் இருந்தாலும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உங்களது கடன் சுமை குறையும். ராகு கேது குரு பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு புகழ் கிடைக்கும். சட்டத்துக்கு புறம்பான வழிகளில் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஆனால், அதில் எச்சரிக்கை தேவை. அதனை முற்றாக தவிர்ப்பது தான் எதிர்காலத்துக்கு சிறந்தது. இல்லையெனில், தொடர் அவமானம் ஏற்படும்.

மனைவி வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவி வேலைக்கு செல்லும் பெண்மணியாக இருந்தால் அவருக்கு இட மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். அதன் மூலமாக தன வரவு அதிகரிக்கும். எந்த ஒரு விடயத்திலும் மனைவியின் ஆலோசனையை கேட்டு செயற்படுவது வெற்றியைத் தரும். பிணையம் இடுவதை தவிர்க்க வேண்டும். தொலைதூரப் பயணம் மேற்கொண்டால் அதில் கவனம் தேவை.

எதிர்பாராத தன வரவு உண்டு. மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி அவசியம். சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையும். தொழிலில் எந்த கஷ்டமும் இல்லாமல் வெற்றியை பெறுவீர்கள். விவசாயத்திலும் லாபம் பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் வெற்றியை தொடரலாம்.

பெண்களுக்கு அலைச்சல் அதிகம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்

நாக தேவதை வழிபாடு, வேல் வழிபாடு, சூரிய வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு, தொடர்ச்சியாக மேற்கொண்டால் பலன் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் பசு மாட்டுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் தானமாக தருவது நல்ல பலனை உண்டாக்கும்.

மீனம்

அன்பும் அனுசரணையும் கொண்ட மீன ராசி வாசகர்களே!

இந்த ஆண்டில் அனைத்து விடயங்களிலும் கவனமுடன் செயற்பட வேண்டும். சனி பகவானால் மனக் குழப்பங்களும் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படும். சிலருக்கு எண்ணங்களில் தடுமாற்றம் உண்டாகும். சிலருக்கு வாகன விபத்தில் சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. வாகன பராமரிப்பு அவசியம். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகும். ஆனால் இடமாற்றம் கிடைக்கும். வம்பு வழக்கு இருப்பதால் எந்த விடயத்திலும் நிதானத்தையும் கவனத்தையும் முழுதாக பின்பற்ற வேண்டும். கால் வீக்கம், காலில் அடிபடுவது, கால் பாதத்தில் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. சிலருக்கு அடிவயிற்று பிரச்சினைகளும் உண்டாகலாம். உணவு பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதனை வழக்கப்படுத்திக்கொண்டால் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். பெற்றோர்களின் உடல் நலன் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

பழைய கடன்கள் நிறைவடைந்தாலும், புதிய கடன்கள் ஏற்படும். இந்த முறை தகுதிக்கேற்ற வகையில் கடன் வாங்குங்கள். இல்லையெனில், இதனால் சிக்கல் ஏற்படும். மனைவியுடனான உறவில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் அளவாகவும் சுருக்கமாகவும் நிதானமாகவும் பேசுங்கள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

மனைவி வழி சொத்து கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மூலமாகவும் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளிடமிருந்து பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்காததால் பிரச்சினை உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக மறதி மற்றும் கவனச் சிதறல் அதிகமாகும். இதனால் வாசிப்பதுடன் எழுதிப் பார்க்கும் பயிற்சியையும் மேற்கொண்டால் தேர்வில் சித்தி அடையலாம். பிறருக்கு வெளிநாடு செல்வதற்கும் , வெளிநாட்டின் குடியுரிமை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். சிறு வியாபாரிகளுக்கும் பெரு வியாபாரிகளுக்கும் வளர்ச்சி உண்டு. பொருளாதார விடயங்களிலும் தன வரவு விடயத்திலும் தடை இல்லை. உங்களது சேமிப்புகளை எதிர்காலத்துக்காக முதலீடு செய்வது சிறப்பு.

ஏழரை சனியின் காலம் என்றாலும் உங்களது வீட்டில் சுப நிகழ்வு நடைபெறும். சில பெண்களுக்கு எதிர்பாராத பெரிய இடத்திலிருந்து பெண் கேட்டு வருவர். அந்த திருமணமும் நடந்தேறும். நேர்மையாகவும் நியாயமாகவும் செயற்பட்டால் வெற்றியுடன் இந்த ஆண்டை எதிர்கொள்ளலாம்.

பெண்களுக்கு இந்த ஆண்டில் உங்களது பெயரில் வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். தந்தை மூலம் சொத்துக்கள் கிடைக்கும். தாயாரின் நகைகளும் கிடைக்கும்.

பரிகாரம்

ஆஞ்சநேயர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, காமதேனு வழிபாடு, காவல் தெய்வ வழிபாடு, திருச்செந்தூர் முருகன் வழிபாடு சிறப்பை தரும். ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பது தொடர்பான உபகரண பொருட்களை தானமாக தருவதும், தாயாரிடம் ஆசியை பெறுவதும் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கணித்தவர் : 'சோதிட ரத்னா' ராஜசேகர்
SHARE