யாழில். கையூட்டு பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் நீதிமன்றில் சரண்; விளக்கமறியலில் வைக்க உத்தரவு..!!!
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலை அதிகாரியின் மகன் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டையடுத்து தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் சரண்டைந்தார்.
சட்டத்தரணி ஊடாக யாழ்பபாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த சந்தேக நபரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகரின் மகன் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்கு போக்குவரத்து பொலிஸாரால் வழக்கு பதிவு செய்த நபரிடம் நீதிமன்ற வழக்கை இல்லாமல் செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்றுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவு எனத் தெரிவித்தே கையூட்டுப் பெற்றுள்ளார். எனினும் கையூட்டு வழங்கிய நபருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணத்தை செலுத்தி விடுதலையான நபர், பொலிஸ் அதிகாரியின் மகனைத் தொடர்புகொண்டு வழக்கை இல்லாமல் செய்வதற்குதானே பணம் வாங்கினீர்கள் எனக் கேட்டுள்ளார். "பிணையில் விடுவதற்குதானே பணம் வாங்கினேன்" என்று கையூட்டுப் பெற்றவர் பதிலளித்துள்ளார்.
கையூட்டுப் பெற்றவரின் குரல் பதிவை பதிவு செய்த பணம் வழங்கியவர், யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்துக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலில் அவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கையூட்டு வழங்கியவரின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் சான்று ஆதாரமாக பொலிஸ் அதிகாரியின் மகன் கையூட்டு பெறும் சிசிரிவி பதிவும் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மகன் மீதான குற்றச்சாட்டை தவிர்க்க யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான தலைமை பொலிஸ் பரிசோதகர் மேலிடத்திடம் தொடர்புகொண்ட போதும் ஆதாரங்களுடன் முறைப்பாடு பதிவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த போதும் அவர் தலைமறைவாகியிருந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி முல்லைத்தீவுக்கு இடமாற்றப்பட்டார்.