கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னே..!!!
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னே பதவியேற்றுள்ளார்.
லிபரல் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பிரதமர் பதவி ஆகியவற்றிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ உத்தியோகபூர்வமாக விலகியதையடுத்து மார்க் கார்னே லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் 24ஆவது பிரதமராகவும் நேற்று(14) பதவிப்பிரமாணம் செய்தார்.
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னேவுடன் 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது.
மார்க் கார்னே முன்னதாக கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்டுள்ளதுடன் அரசியலுடன் தொடர்புபடாத ஒருவராகவே இருந்துள்ளார்.
கனடா எந்தவொரு வகையிலும் அமெரிக்காவின் மற்றுமொரு மாநிலமாக மாறாது என மார்க் கார்னே சூளுரைத்துள்ளார்.
கனடா அடிப்படையில் ஒரு மாறுபட்ட நாடு எனவும் அது அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வரி விதிப்புகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் கலந்துரையாடுவது குறித்து மார்க் கார்னே சமிக்ஞைகளை வௌிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்காவையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பையும் தாம் மதிப்பதாக மார்க் கார்னே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியா மற்றும் பிரான்ஸுக்கு கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னே அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.