Sunday, 9 March 2025

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா மூன்றாவது தடவையாக சுவீகரித்தது..!!!

SHARE

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஒன்பதாவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 4 விக்கெட்களால் வெற்றி கொண்டு இந்தியா சம்பியனானது.

இந்தியா வென்றெடுத்த இரண்டாவது தொடர்ச்சியான ஐசிசி கிண்ணம் இதுவாகும். ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தை இந்தியா கடந்த வருடம் வென்றிருந்தது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா சம்பியனானது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2002இல் இலங்கையுடன் இணைச் சம்பியனான இந்தியா, 2013இல் மீண்டும் சம்பியனாகி இருந்தது

அத்துடன் 2000ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்த வருடம் இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.

முந்தைய சம்பியன் பட்டங்களைவிட இந்த சம்பியன் பட்டம் இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்ததாகும்.

ஏனெனில், இம்முறை தோல்வி அடையாத அணியாக இந்தியா சம்பியனானதுடன் லீக் சுற்றிலோ, நொக் அவுட் சுற்றிலோ எந்த ஒரு அணியிடமும் எவ்வித சவாலையும் எதிர்கொள்ளவில்லை.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இன்றைய இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும், ஷுப்மான் கில் (31), விராத் கோஹ்லி (1), ரோஹித் ஷர்மா ஆகியோர் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பேரிடியைக் கொடுத்தது.

ரோஹித் ஷர்மா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால் அந்த நம்பிக்கை நீடிக்கவில்லை.

இருவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (203 - 5 விக்.)

ஷ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 29 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

கே. எல். ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹார்திக் பாண்டியா 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (241 - 6 விக்.)

ஆனால், கே. எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

கே.எல். ராகுல் 34 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து சிரமத்திற்கு மத்தியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து 38 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த 12 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து கௌரவமான நிலையை அடைந்தது.

ஆரம்ப ஜோடியினரான வில் யங் (15), ரச்சின் ரவிந்த்ரா (37) ஆகிய இருவரும் 49 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், வில் யங், ரச்சின் ரவிந்த்ரா, கேன் வில்லியம்சன் (11) ஆகிய மூவரும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததும் ஓட்ட வேகம் குறைந்தது.

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 108 ஓட்டங்களாக இருந்தபோது டொம் லெதம் (14) ஆட்டம் இழந்தார்.

டெரில் மிச்செலும் க்லென் பிலிப்ஸும் 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது க்லென் பிலிப்ஸ் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் அணித் தலைவர் மைக்கல் ப்றேஸ்வெல்லுடன் 6ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்த டெரில் மிச்செல் 63 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

மறுபக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கல் ப்றேஸ்வெல் 40 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரோஹித் ஷர்மா, தொடர் நாயகன்
SHARE