
யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் சனிக்கிழமை வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் வியாழக்கிழபை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.
இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி திரும்பிச் சென்றிருந்தனர்.
இந் நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்தியர் சங்கத்திற்கும் இடையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டது.
இதனையடுத்து பொது மக்களின் நலன் கருதி தமது பகிஸ்கரிப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ள போவதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
இதற்கமைய போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளன.