Wednesday, 26 March 2025

கனடா செல்ல ஆசைப்பட்ட 9 பேருக்கு விமானநிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!!!

SHARE
போலியான கனேடிய விசாக்களுடன் நாட்ட்சிவிட்டு வெளியேற முயன்ற இலங்கையர்கள் ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் நேற்று முன் தினம் (24) மாலை ஒரு சந்தேக நபரின் பயண ஆவணங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்து சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பயணியின் கனேடிய தொழில் விசா போலியானது என கண்டறியப்பட்ட அதே நேரத்தில் அவரது கடவுச்சீட்டு உண்மையானது என்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபரை மேலும் விசாரித்ததில், இதேபோன்ற போலி விசாக்களுடன் மேலும் எட்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் துபாய்க்கு புறப்படுவதற்காக புறப்படும் முனையத்தில் காத்திருந்தவேளை கைது செய்யப்பட்டதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை 30 முதல் 40 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் போலியான கனடிய விசாவைப் பெறுவதற்காக தலா 4.5 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் தங்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட ஒரு நபர், அவர்கள் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு நீர்கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், விமான நிலையத்தில் அவர்களை இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

போலி விசாக்களுக்காக மில்லியன் கணக்கில் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் ஒருங்கிணைப்பாளர், குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நீர்கொழும்பு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதானவர் கனடாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், உள்ளூர் முகவர் மூலம் செயல்பட்டமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக CIDயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , போலி விசா ஆவணங்கள் தொடர்பாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய குழு இது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
SHARE