மேஷம்
விவேகத்துடனும் விழிப்புடனும் செயற்படும் மேஷ ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு எதிர்வரும் 26.04.2025 அன்று மாலை 04.20 மணிக்கு கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் பிரவேசம் செய்கிறார்கள்.
இதுவரை கன்னி ராசியில் இருந்து ஆறாமிடத்தில் கேது அமர்ந்து பல்வேறு உடல் உபாதைகளையும், கடன் சுமைகளையும் தந்துவந்த கேது இனி பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் முயற்சி ஸ்தானத்தையும் லாபஸ்தானத்தையும் பார்ப்பதும் ஏழாமிடத்தை பார்வையிடுவதும் சில காரிய தடைகளை ஏற்படுத்தும். உங்களின் முயற்சிக்கு எந்த பலனும் அமையாமலும் எதிர்பார்த்த சில விடயங்கள் தாமதமும் ஆகலாம். திருமணத்தடைகள் உண்டாகும் என்பதால் நாகதேவதை வழிபாடும் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து செய்துவர உங்களின் வெற்றிப்பாதையை நீங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
இனி, இதுவரை விரையஸ்தானத்தில் இருந்த ராகு லாபஸ்தானத்தில் சனியுடன் இணைவு பெறுவது உங்களின் தொழிலில் முன்னேற்றம் காண்பதுடன் குரு பெயர்ச்சிக்கு பின்பு இன்னும் சிறப்பாக உங்களின் செயல்கள் வளம் பெறும். குரு பார்வை பெற்றவுடன் விபரீத ராஜயோக பலன்களை பெறுவீர்கள். எந்த தொழில் செய்தாலும் அதில் வளம் பெறும் வாய்ப்புகள் அமையும். திடமான நம்பிக்கையே உங்களை மேலும் சிறப்படையச் செய்யும். எதிர்கால நற்பலன்கள் உருவாக்கிக்கொள்ளும் நல்ல சூழ்நிலைகள் அமைய அம்மன் வழிபாடுகள் செய்து வர உங்களுக்கு ஊக்கமும் பொருளாதார வளமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் காலை 6 - 7 மணிக்கு தொடர்ந்து விநாயகர் வழிபாடு செய்யுங்கள். தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள உங்களின் சகல காரியங்களும் நன்மையை தரும்.
ரிஷபம்
தனக்கென்று கொள்கைகளை வகுத்து செயற்படும் ரிஷப ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு எதிர்வரும் 26-04-2025 முதல் மாலை 04.20 மணிக்கு கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் அமர்கிறார்கள்.
உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ராகுவும், சுகஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து உங்களின் செயல்களை செயற்படுத்துகிறார்கள். ராகு தொழில் ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்தையும் பார்ப்பதும் நான்காமிடத்தையும், எட்டாமிடத்தையும் பார்வையிடுவது உங்களின் தொழிலில் புதிய திருப்பங்கள் உண்டாகும். எதை செயற்படுத்த வேண்டுமென்று நினைத்தீர்களோ அதனை குருபெயர்ச்சிக்கு தொடங்கினால் பின்பு நல்ல தொழில்வாய்ப்பு அமையும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை தேடுபவருக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும்.
இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த கேது சுகஸ்தானத்தில் வருவது உடல்நல குறைபாடுகள், வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய வாகனம் வாங்குவீர்கள். பிறந்த ஜாதகத்தில் கேது நிலையை பொறுத்து சிலர் உயர்பதவியும் சிறந்த பாராட்டுக்களும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் கவனமாக இருப்பதுடன் அடிக்கடி தெய்வ வழிபாடுகள் செய்வது நல்லது. தாயார் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி கொண்ட பெருமாள் தரிசனம் செய்து வருவதும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபமிட்டு வருவதும் நற்பலனை பெற்றுத் தரும்.
மிதுனம்
காலத்தையும் நேரத்தையும் அவதானித்து செயற்படும் மிதுன ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு எதிர்வரும் 26-04-2025 அன்று மாலை 04.20 மணிக்கு பாக்கியஸ்தானத்தில் ராகுவும், மூன்றாமிடத்தில் கேதுவும் அமர்ந்து பலன் தருகிறார்கள்.
இதுவரை சுகஸ்தானத்தில் இருந்துவந்த கேது இனி முயற்சி ஸ்தானத்தில் யோக கேதுவாக அமர்கிறார். இதனால் அவர்களின் அனைத்து வித முயற்சிகளும் வெற்றியை தரும். நல்ல நிலைகளில் எதிர்பார்த்து வந்த உங்களின் செயல்கள் மேலும் சிறப்பாக அமையும். எதையும் சாதிக்க வேண்டுமென்ற உங்களின் எண்ணம் மெருகூட்டும் வகையில் அமையும். எடுத்த காரியம் வெற்றியையும், நற்பலனையும் பெற்றுத் தர உதவி செய்வார். அரசு சார்ந்த நல்ல காரியம் சிறப்பாக செயல்பட தொடங்கும். பொது விடயங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். தனித் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். குருவின் பெயர்ச்சிக்கு பின்பு இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
பாக்கியஸ்தானத்தில் ராகு அமர்ந்து லாபஸ்தானத்தையும் களத்திரஸ்தானத்தையும் பார்ப்பது கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குருபெயர்ச்சிக்கு பின்பு ஒன்லைன் வர்த்தகம் சிறப்பாக அமையும். எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்படுவது அவசியம் என்பதால் சற்று எச்சரிக்கையுடனும் அதேவேளை, காற்றுள்ள போதே கற்றுக்கொள்வதும் நல்லது. பாக்கியஸ்தானத்தில் அமரும் கிரகங்கள் பெரும்பாலும் எந்த கெடுபலனும் தருவதில்லை என்றாலும் எதிலும் விவேகமுடன் செயற்படுவதன் மூலம் நல்ல ஆதாயமும் பெற முடியும். எதை சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களோ... அது உங்களுக்கு சாதகமாக அமையும். நல்ல காரியத்தை உடனே செய்து பலன் பெறுங்கள்.
பரிகாரங்கள்:
திங்கட்கிழமைகளில் மாலை வேளையில் சிவன் ஆலயம் சென்று சிவ தரிசனமும், பைரவர் தரிசனமும் செய்து தீபமேற்றி வணங்கி வர உங்களின் முயற்சியும் காரிய சித்தியும் கைகூடும்.
கடகம்
உறுதியான உள்ளமும் தெளிவும் கொண்ட கடக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு எதிர்வரும் 26-04-2025 முதல் அட்டம ராகுவாகவும், தனஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து பலன் தருகிறார்கள்.
சூரியன் வீட்டில் கேது அமர்ந்து பல வழிகளில் உங்களின் பணிகளில் முடக்கம் செய்து வந்தாலும் கேது ஆதிக்கம் இருப்பதால் அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளில் அனுகூலமான சில சூழ்நிலைகள் அமையும். பணியில் இருப்பவர்களுக்கு அதிகார வர்க்கத்தால் சில சங்கடங்கள் உண்டாகலாம். அரசியலில் இருப்பவருக்கு சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த எளிமையான காரியமாக இருந்தாலும் பிறரின் உதவியுடன் செய்ய வேண்டிவரும். துணிச்சலான முடிவுகள் எடுப்பதன் மூலம் உங்களின் காரியம் சிலவேளை நன்மையை பெற்றுத் தரும். குருபெயர்ச்சிக்குப் பின்பு நல்ல பலன்கள் ஓரளவு கிடைக்கும்.
அட்டம ராகு உங்களை எப்பொழுதும் எச்சரிக்கையுடன் செயற்படும் சூழ்நிலையை உருவாக்கும். எப்படிப்பட்ட உறவாக இருந்தாலும் நண்பராக இருந்தாலும் பிணயம் இடுவதை தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில், உங்களின் பொருளாதார நிலை சரியில்லாதபோது சிலர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடும் என்பதால் ஒருவருக்கு உதவி செய்து கெட்ட பெயர் எடுப்பதை விட ஒருவருக்கும் எதுவும் செய்யாமல் கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ மேன்மை உண்டாகும். குரு பெயர்ச்சிக்கு பின்பு அட்டம ராகுவை குரு பார்ப்பது நல்லது. அதேவேளை விரைய ஸ்தானத்தில் குரு இருப்பதால் கவனமாக செயற்படுவது உங்களுக்கு பாதுகாப்பானது.
பரிகாரங்கள்:
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் மாரியம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் (ஆமணக்கு) தீபமிட்டு மாவு சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்து தானம் செய்து வர கஷ்டங்கள் தீரும்.
சிம்மம்
ஆற்றலும் எழுச்சியும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை இருந்த அட்டம ராகு எதிர்வரும் 26-04-2025 முதல் ஏழாமிடத்தில் வந்து அமர்வது கூட்டுத் தொழிலை சிறப்பாக்கும். கேது தனஸ்தானத்திலிருந்து ராசிக்கு வருவதால் செயற்பாடுகள் ஸ்திரப்படும்.
இனி ராசியில் கேது அமர்வதால் உழைப்பால் முன்னேற்றம் அடையும் வாய்ப்பு அமையும். நினைவாற்றல் குறையும். தன் உடலை கவனித்துக்கொள்ளும் சூழ்நிலை அமையும். எந்த காரியமும் செயற்படும் முன்பே யோசித்து செயற்படுவதும் செயற்பட்ட பின்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்ளும் பாக்கியமும் கிடைக்கும். நிறுவனத்தை வழிநடத்திச் செல்பவருக்கு துணிச்சலுடன் செயற்படும் மன உறுதி உண்டாகும். நாளைய திட்டத்தை எழுதி வைத்துக்கொண்டு செயற்படுவது இன்னும் சிறப்பாக அமையும்.
களத்திர ஸ்தானத்தில் ராகு வெளிப்படை தன்மையை உருவாக்குவர். யாருடனும் கூட்டு சேர்வதற்கு முன்பு எப்படி அதை செயற்படுத்துவது, எப்படி திட்டமிட்டபடி செயற்படுவது போன்ற வலிமையுடன் செயற்படுவது நல்லது. சனியுடன் இணைவதால் சுறுசுறுப்பான செயல்களை ஊக்கப்படுத்துவார்கள். மனதில் பட்டதை செயற்படுத்தும் உத்வேகத்தை உருவாக்கிக்கொள்வீர்கள்.
வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டுத் தொடர்புகள் சிறப்பாக அமையும். கடந்த கால தோய்வு நிலை மாறி வெற்றியை நோக்கிய பயணம் இருக்கும். குருபெயர்ச்சிக்குப் பின்பு உங்களின் எண்ணம் விரைவாக அமையும். பொருளாதார நிலை மேன்மை அடையும்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமை விநாயகர் வழிபாடும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தொடர்ந்து நற்பலன்கள் அமையப் பெற்று பொருளாதார வளம் பெறுவீர்கள்.
கன்னி
தைரியமும் துணிச்சலும் கொண்டு விளங்கும் கன்னி ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு எதிர்வரும் 26-04-2025 முதல் ராகு ஆறாமிடத்திலும், ஜென்ம கேது விரைய ஸ்தானத்திலும் அமர்கிறார்கள். புதிய யுக்திகளுக்கு வழிவகுப்பார்கள்.
இனி ஆறாமிட ராகு சனியுடன் இணைவு பெறுவதும் நான்காமிட எட்டாமிட பனிரெண்டாமிட பார்வை உண்டாவதும் ராகு எழுச்சியுடன் உங்களுக்கு ஊக்கம் தந்து நற்பலன்களை பெறுவதற்கு உதவி செய்வார். சுகஸ்தானத்தை பார்ப்பது பொருளாதாரத்தில் வளர்ச்சியாக இருந்தாலும் உடல்நலனில் கவனம் மறந்து உறவுகளும் நண்பர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். பெரிய கடன் வாங்கி சிறிய கடன்களிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
விரைய கேது வெளிநாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்தி வெற்றியை பெற உதவுவார். சூரியன் வீட்டில் இருப்பதால் அரசியல்வாதிகளுக்கு பக்கபலமாக உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதற்கும் அஞ்சாமல் செயற்படுவீர்கள். ஆன்மிக பயணத்துக்கு செலவு செய்ய வேண்டிவரும். வெளிநாடுப் பயணம் சிலருக்கு அமையும். பொது வாழ்வில் இருப்பவருக்கு செல்வாக்கு குறையாது என்றாலும் கூடுதல் செலவுகள் வரும். தனவரவுக்கு சிரமம் வராது என்றாலும் அதனை அடைய சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். தங்க நகைகளை மீட்டெடுதல், வங்கிக் கடன் மூலம் சில கடன்களை தீர்த்துக்கொள்ளல் போன்ற காரியங்களும் நன்றாக அமையும். குரு பெயர்ச்சிக்கு பின்பு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு ராகுவுக்கு உளுந்தும் கேதுவுக்கு கொள்ளும் வைத்து, அரளி மாலை போட்டு வேண்டிக்கொள்ள நினைத்த காரியம் கைகூடும்.
துலாம்
நேர்மையையும் உண்மையையும் கொள்கையாக கொண்ட துலாம் ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் இருந்த ராகு எதிர்வரும் 26-04-2025 முதல் பஞ்சம ராகுவாகவும், பனிரெண்டாமிட கேதுவாக லாபஸ்தானத்திலும் அமர்வது உங்களின் துன்பங்களை நீக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவது அனுகூலங்களில் சின்னச் சின்ன தடைகளை உண்டாக்கினாலும் உங்களின் முயற்சிக்கு சிறப்பான வளர்ச்சியை பெற்றுத்தரும். எதையும் பிறரின் உதவியுடன் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். புத்திரர்களின் மூலம் சிலருக்கு சவாலான நிலை உருவாகும். அதற்கு சில முயற்சிகளையும் சிரமங்களையும் கொள்ள வேண்டிவரும். கொடுத்த வாக்குறுதிகளை உரிய நேரத்தில் உருவாக்கிக்கொள்ள முடியாமல் போராடும்போது குருவின் பார்வை பெறும் போது.... குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களுக்கு வரும் துன்பம் பனி போல மாறிவிடும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
லாபஸ்தானத்தில் கேது அமர்ந்து ராசியை பார்ப்பது மனதில் தெளிவையும் செய்யும் தொழிலில் நம்பிக்கையும் உண்டாகச் செய்வார். பொது நலன் கருதி நீங்கள் செயற்படும்போது மக்களின் ஆதரவும் உங்களுக்கு பெரிய பலனை பெற்றுத்தரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பு அமையும். அரசாங்க பணிகளில் மிக சிறப்பாக செயற்படுவீர்கள். உங்களின் ராசியை குரு பார்வையிடும்போது இன்னும் மறுமலர்ச்சியை பெறுவீர்கள். புதிய சகாப்தத்தை உருவாக்கி வளர்ச்சி பெறுவீர்கள். அதையும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியுடன் செயற்படுவீர்கள். தனித் திறமையுடன் அனைத்தையும் செயற்படுத்துவீர்கள்.
பரிகாரங்கள்:
செவ்வாய், சனிக்கிழமைகளில் தொடர்ந்து நரசிம்மர் வழிபாடு செய்தும் மிருகங்களுக்கு உணவு, தண்ணீர் வைப்பதன் மூலம் உங்களின் செயல்கள் பலன் அடைந்து பொருளாதாரம் வளம் பெறும்.
விருச்சிகம்
காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் செயற்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு ராகு எதிர்வரும் 26-04-2025 முதல் சுகஸ்தானத்தில் அமர்வதும் கேது தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து கேந்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் நற்பலன்களை தரும்.
சுகஸ்தானத்தில் ராகு சனியுடன் கூடி அமர்வதால் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பண்பையும் நற்குணங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டிவரும். தேவையற்ற விடயங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான சில காரியங்களுக்கு முக்கியத்துவம் தருவது நலம். நரம்பு சம்பந்தமான சில பிரச்சினைகள் வரும் என்பதால் உணவுகளில் நரம்பை பலப்படுத்தக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். வாகன ஓட்டிகள் பொறுமையுடன் வாகனத்தை இயக்குவது அவசியம். எதையும் ஆழமாக சிந்தித்து செயற்படுவது உங்களுக்கு நன்மையை பெற்றுத் தரும். புதிய திட்டங்களை சில காலம் கழித்து செய்வது நல்லது.
தொழில் ஸ்தானத்தில் கேது அமர்வது இனி சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொகைகளை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் போகும். அதிக இருப்பு வைத்துக்கொள்வதை தவிர்த்து தேவைகளுக்கு மட்டும் கொள்முதல்களை செய்வதன் மூலம் சில நெருக்கடியான சூழ்நிலைகளை தவிர்க்கலாம். சொல்லிச் செய்வதை விட சொல்லாமல் எதையும் செய்வதன் மூலம் நிகழ்காலத்தை சீராக கொண்டுசெல்ல முடியும். வருமானத்துக்கு தகுந்த செலவுகளை செய்வதன் மூலம் புதிய கடன் படுவதை தவிர்க்கலாம். ஆடம்பரத்தை தவிர்த்து அத்தியாவசியமான செலவுகளை செய்வதன் மூலம் எதிர்கொள்ளக்கூடிய துன்பங்களை குறைத்துக்கொள்வது நல்லது. இறை வழிபாடு மூலம் உங்களை சரி செய்துகொள்ளலாம்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் கருட வழிபாடு செய்து நெய் தீபமேற்றி கருட மந்திரம் சொல்லி வேண்டிக்கொள்வதுடன் பறவைகளுக்கு உணவளிப்பது நல்ல பலனை பெற்றுத் தரும்.
தனுசு
திடமான நம்பிக்கையும் கொள்கையும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் அமர்ந்த ராகு இனி மூன்றாமிடத்திலும் தொழில் ஸ்தானத்திலிருந்து இனி பாக்கியஸ்தானத்திலும் அமர்வது எதிர்வரும் 26-04-2025 முதல் உங்களுக்கு நற்பலன்களை தொடர்ந்து பெற்றுத்தரும்.
முயற்சி ஸ்தானத்தில் ராகு அமர்ந்து உங்களின் ராசியை பார்வையிடுவதும் சனியுடன் இணைவு பெறுவதும் உங்களுக்கு சிறப்பான நல்ல பலன்களை பெற்றுத் தருவார்கள். நல்ல வேலையும் வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். பொது வாழ்விலும் அரசியலிலும் உங்களின் செல்வாக்கு உயரும். எதிலும் தனித்தன்மையுடன் செயற்படுவீர்கள். காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் சுறுசுறுப்பாக செயற்பட்டு நன்மையை பெறுவீர்கள். செய்யும் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
பாக்கியஸ்தானத்தில் கேது யோகாதிபதியான சூரியன் வீட்டில் அமர்வது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒன்பதாம் இடத்தில் அமரும் கிரகம் கெடுபலன்களை தராது என்பது சோதிட விதி என்பதால் பெரும்பாலும் கேதுவால் கூடுதல் நன்மையே உண்டாகும்.
அரசாங்கத்தின் சலுகைகளை பெறுதல், அரசியலில் உன்னதமான நிலையை அடைதல், தொழில் இல்லாதவருக்கு நல்ல தொழில் அமைவது போன்ற வாய்ப்புகள் அமையும். குரு பார்வை ராசிக்கு பெறும்போது சனி / ராகு இருவரையும் குரு பார்ப்பதும் லாபஸ்தானத்தை குரு பார்வையிடும்போது சிறப்பான வளர்ச்சிகளைப் பெறுவீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
பரிகாரங்கள்:
ஆஞ்சநேயர் வழிபாடு செய்து செந்தூரம் சாற்றி வேண்டுதல் செய்வதும், பிரதோஷ காலத்தில் நந்தி வழிபாடு செய்வதும், உங்களை தொழில் உத்தியோகத்தில் வளம் பெறச் செய்யும்.
மகரம்
அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்த நினைக்கும் மகர ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருந்த ராகு இனி தனஸ்தானத்திலும் பாக்கியஸ்தானத்திலும் கேது அட்டமஸ்தானத்திலும் அமர்கின்றார்கள். ஆகவே, எதிர்வரும் 26-04-2025 முதல் ராகு / கேது பெயர்ச்சி உங்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாகும்.
தனஸ்தானத்தில் ராசிநாதன் சனியும் ராகுவும் இணைவு பெறுவது உங்களின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை பெற்றுத் தரும். வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். பேச்சுத்திறன் அதிகரிக்கும். உங்களின் ஈர்ப்புத் தன்மையினால் பிறரிடம் சாதூர்யமாக பேசுவீர்கள். சிறு வயது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பொது வாழ்வில் ஈடுபாடு கொண்டாலும் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இருக்காது. முதலீடு இல்லாத தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காலத்தையும் நேரத்தையும் அறிந்து அதற்கு தகுந்தபடி நடப்பீர்கள். குருபெயர்ச்சிக்கு பின்பு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
அட்டம கேதுவாக அமர்வது உங்களின் முன்னேற்றத்துக்கு சில தடைகளாக அமையும். எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். பொன்னும் பொருளும் சேரும். அதேவேளை அடுத்தவருக்கு இரக்கப்பட்டு உங்களிடம் இருக்கும் பொருளையோ பணத்தையோ கொடுத்து ஏமாறாமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் நினைக்கும் காரியம் நடக்க பிறரை நம்பிக்கொண்டிருந்தீர்களேயானால், அவரே உங்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரங்கள்:
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 4.30 - 6 மணிக்கு பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி, விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள தடைப்பட்ட காரியம் சீராக நடக்கும்.
கும்பம்
லட்சியத்தை அடைய கொள்கை பிடிப்புடன் செயற்படும் கும்ப ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த ராகு ஜென்மத்திலும் அட்டம கேது களத்திரஸ்தானத்திலும் அமர்வதால் எதிர்வரும் 26-04-2025 முதல் உங்களின் வாழ்வில் செயற்பாடுகள் மேன்மையடையும்.
ஜென்ம ராகு ராசிநாதன் சனியுடன் இணைவு பெறுவது முயற்சிகள் இருந்தும் செயலில் வேகமின்றி இருந்த நிலை மாறி சற்று சுறுசுறுப்பை பெறும். காலத்தையும் நேரத்தையும் தட்டிக் கழிக்காமல் வேகமாக செயற்படுவீர்கள். தனித்திறமைகள் கொண்டு இயங்குவீர்கள். புதிய திட்டங்களுக்கு ஆலோசனைகளை செய்து வருவீர்கள். காலத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழ்வில் பல உன்னதமான மாற்றங்கள் உருவாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். தொழிலில் முழுமையான கவனம் செலுத்துவீர்கள். குருபெயர்ச்சிக்கு பின்பு உங்களுக்கு மேலும் ஊக்கமும் எடுத்த காரியம் கைகூடும் பொருளாதாரத்தில் வளர்ச்சியையும் உறுதியான நம்பிக்கையும் கொண்டு விளங்குவீர்கள்.
இனி களத்திர ஸ்தானத்தில் கேது அமர்வது கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஒன்லைன் வர்த்தகத்தில் ஆதாயம் கிடைக்கும். ஒன்லைன் மூலம் தொழில் செய்பவருக்கு நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். கோவில்கள், ஆலய திருப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு உங்களால் உண்டான உதவிகளையும் உடல் உழைப்பு தந்து வருவீர்கள். அரசியலில் புதிய நண்பர்களின் தொடர்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமையப் பெறும். கணவன் மனைவி உறவு சுமுகமான சூழ்நிலையை தரும். ஆன்மிக குருமார்களையும் மகான்களையும் சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். குரு பெயர்ச்சிக்குப் பின்பு வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் நரசிம்மர், பஞ்சமிகளில் வராகி வழிபாடும் தொடர்ந்து செய்துவர உங்களின் தொழிலும் உத்தியோகமும் முன்னேற்றமடைந்து, பொருளாதார வளமும் பெறுவீர்கள்.
மீனம்
பணிவும் இரக்க குணமும் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு எதிர்வரும் 26-04-2025 முதல் ஜென்ம ராகு விரையத்திலும், களத்திர கேது ஆறாமிடத்திலும் அமர்ந்து உங்களின் செயல்களை மேன்மைப்படுத்தி வருவார்கள்.
ஆறாமிடமான ரணரோக சத்ருஸ்தானத்தில் கேது அமர்வது உங்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான உடல் உபாதைகளை தருவதுடன் புதிய கடன் பெற்று பழைய கடன்களை நீக்குவீர்கள். எந்த முடிவும் நிரந்தரமான தீர்வாக இருக்க வேண்டுமென்று நினைத்து அதற்கு தகுந்தபடி செயற்படுவீர்கள். காலத்தையும் சூழ்நிலையையும் அறிந்து அதற்கு தகுந்தபடி சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வீர்கள்.
எதை சாதிக்க நினைத்தீர்களோ... யாரை எதிரியாகவும் தொல்லை என்றும் நினைத்தீர்களோ... அவர்களே உங்களுக்கு உதவி செய்யும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் யாரையும் எதிரியாக கருதாமல் நட்பு கொண்டு செயற்படுவது நல்லது.
விரய ஸ்தானத்தில் ராகு சனியுடன் சேர்ந்து அமர்வது தேவையற்ற செலவீனங்களை குறைத்து வளத்தை பெருக்கும். யாருக்கும் எதையும் கொடுக்கும் முன்பு யோசித்து செயற்படுவீர்கள். குலதெய்வ வழிபாட்டின் மூலம் உங்களின் செயல்களை மேன்மைப்படுத்திக்கொள்வீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகளை விருத்தி செய்துகொள்வீர்கள். நல்ல காலத்தையும் நேரத்தையும் பயன்படுத்திக்கொள்வதுடன் தொழில் சார்ந்த வெளியூர் பயணத்தை திட்டமிட்டு செயற்படுத்தி வெற்றி காண்பீர்கள். இதுவரை உங்களுக்கு யார் இடையூறாக இருந்தார்களோ... அவர்கள் உங்களின் வழியில் வராமல் ஒதுங்கிக்கொள்வார்கள். குருபெயர்ச்சிக்கு பின் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள்... முடியாதவர்கள் சக்கரத்தாழ்வார் சுலோகத்தை சொல்லி விளக்கேற்றி வணங்கி வேண்டிக்கொள்ள உங்களின் சகல காரியங்களிலும் வெற்றி, மன அமைதி கிடைக்கும்.
- கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்