
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும், அக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழரசுகட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், கட்சியின் பாராளுமன்றக் குழு ஊடகப்பேச்சாளரும் மட்டக்களப்புமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் சுமந்திரனின் நியமனத்துக்கு கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரமளித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று களுவாஞ்சிக்குடியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது, நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் பிரகாரம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கான விடயம் எடுத்துக்கொள்ளப்படவிருந்தபோதும், கட்சியின் பதில் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த வைத்தியர் சத்தியலிங்கம் எம்.பி அப்பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்த நிலையில் உடனடியாக அப்பதவி வெற்றிடம் நிரப்பபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் யாப்புக்கு அமைவாக, சிரேஷ்ட துணைப்பொதுச்செயலராளராக இருந்த சுமந்திரன் அப்பதவிக்கு முன்மொழியப்பட்ட நிலையில் அவரது தரப்பில் எவ்விதமான எதிர்மறையான பிரதிபலிப்புக்களும் செய்யப்படவில்லை.
எனினும், சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் அப்பதவிக்கான நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கட்சியின் மத்திய குழுவிற்கு அப்பதவியை வழங்குவதற்கான அதிகாரம் இல்லையென்ற தொனிப்பட வாதங்களை முன்வைத்தனர்.
எனினும், அவ்வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காத நிலையில் மத்தியகுழுவின் பெரும்பான்மையானவர்களின் அங்கீகாரத்துடன் சுமந்திரன் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.