Wednesday, 19 February 2025

சட்டத்தரணி வேடமணிந்து வந்தவர் எதிரி கூண்டில் நின்றவர் மீது துப்பாக்கி சூடு - பாதாள உலக குழு உறுப்பினர் உயிரிழப்பு..!!!

SHARE

கொழும்பு புதுக்கடை நீதிமன்றின் எதிரி கூண்டில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது எதிரி கூண்டில் நின்றவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட நிலையில் , வழக்கு விசாரணைக்காக எதிரி கூண்டில் நின்ற வேளை சட்டத்தரணி போல் வந்த நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

பாதாள உலக உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கனேமுல்ல சஞ்சீவ வெளிநாடுகளில் பதுங்கியிருந்த நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டு , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒன்றரை வருட காலத்திற்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த வேளையே படுகொலை செய்யப்பட்டுள்ளார்
SHARE