
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏனைய நால்வரும் விடுதிகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , தப்பி சென்ற வாகனத்தினை கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.