Saturday, 7 December 2024

யாழில் சிறப்பாக இடம்பெற்ற கந்தர்மடம் அஜந்தனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா..!!!

SHARE

எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான கந்தர்மடம் அஜந்தனின் "மரணங்களின் சாட்சியாக" எனும் சிறுகதைத் தொகுதி மற்றும் "ஆற்றுப்படுத்தும் கலையும் சிலையும்" கட்டுரைத்தொகுதி ஆகிய இரு நூல்களினதும் வெளியீட்டுவிழா 01.12.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ராஜா கிறீம் ஹவுஸ் ஹம்சியா மகாலில் இடம்பெற்றது.

மூத்த எழுத்தாளரும் சிரேஷ்ட உளவியலாளருமான கோகிலா மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடனும், ஆசிரியர் சிறீ யதுர்சன் மற்றும் மாணவர்களின் (மாயோன் வாத்திய இசைக் குழுமத்தினரின்) இசை விருந்துடனும் இனிதே ஆரம்பமாகியது.

கோகிலா மகேந்திரனின் தலைமை உரையை தொடர்ந்து எங்கட புத்தகங்கள் நிறுவனர் குலசிங்கம் வசீகரன் அவர்களினால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.

நூலின் வெளியீட்டுரையினை ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியரான கலாமணி பரணீதரன் நிகழ்த்தினார்.

தலைமைப் போதகர் திரு.லெஸ்லி மத்தியூஸ் அவர்கள் நூல்களினை வெளியிட்டு வைக்க முதற்பிரதிகளை பிராந்திய முகாமையாளர் ம.பிரபாகரன், யாழ் டிறிபேக் கல்லூரி அதிபர் செ.பேரின்பநாதன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

"மரணங்களின் சாட்சியாக" சிறுகதை தொகுதி நூல் தொடர்பிலான கருத்துரையினை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரும் - எழுத்தளாருமான இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.

"ஆற்றுப்படுத்தும் கலையும் சிலையும்" கட்டுரைத்தொகுதி நூல் தொடர்பிலான கருத்துரையினை ஆயுர் வேத மருத்துவரும், சிரேஷ்ட உளவளத் துணையாளருமான புவனலோஜினி ஜீவானந்தம் நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதியில் கந்தர்மடம் அஜந்தனினால் வரையப்பட்ட ஓவியங்கள், நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பங்கேற்று சிறப்பித்தவர்களுக்கு கோகிலா மகேந்திரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

எழுத்தாளர்கள், உளவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இந்நிகழ்வு நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.












SHARE