Saturday, 21 December 2024

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர்..!!!

SHARE

தமிழக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனலைதீவை சேர்ந்த இரண்டு கடற்தொழிலாளர்கள் உள்ளிட்ட மூன்று கடற்தொழிலாளர்களும் , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரு கடற்தொழிலாளர்களும் , கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில் , தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நோக்குடன் திருச்சி சிறப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அவர்கள் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு , உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.

அவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவரையும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் அழைத்து வந்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார்.

அதேவேளை அனலைதீவு கடற்தொழிலாளர்கள் இருவரையும் , அவர்களின் படகு மற்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரத்துடன் கடல் வழியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கடந்த 03ஆம் திகதி ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE