அச்சுறுத்தி அடாவடித்தனம் செய்ய கடவுள் வந்தாலும் அனுமதி இல்லை ; யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்..!!!
“என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சுறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது.
போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .
ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.
இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.
பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.
தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள்.
இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும்.
வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.