Thursday, 12 December 2024

வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழப்பு..!!!

SHARE


வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை மாலை வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப் பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆலோசனை வழங்கினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருமாக இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன், ஆளுநர் தொலைபேசியில் நேற்றைய தினம் புதன்கிழமை உரையாடினார்.

உயிரிழப்புக்கான காரணம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மாதிரிகள் கொழும்பு மற்றும் கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வேறு வைரஸ் தொற்றுக்களாகவும் இருக்கக்கூடும் என்ற நியாயமான சந்தேகங்கள் இருப்பதாகவும் அது தொடர்பான விவரங்களையும் ஆளுநரிடம் குறிப்பிட்ட அவர் இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து இரண்டு குழுக்கள் வருகை தரவுள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்த காய்ச்சலுக்குரிய தடுப்பு மருந்துகள் வேறு மாவட்டங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டு விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதேபோன்று ஒரு தொகுதி மருந்துக்கு கொழும்பு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவத்துறையினர் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், மாவட்டத்தில் இந்தக் காய்ச்சலால் பாதிப்புறாத ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவிலிருந்து மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்களைப் பெற்று அவற்றை வினைத்திறனுடன் மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
SHARE