இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் 60 ஆண்டுகள் நிறைவு..!!!
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் குறிக்கும் நிகழ்வுகள், யாழ்ப்பாண இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகம், வடமாகாண சபைத் தலைவர் சி.வி. சிவஞானம், ஆளுநரின் தலைமை செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா, மற்றும் ITEC திட்டத்தின் கீழ் இந்தியாவில் பயிற்சி பெற்ற பல்வேறு துறைகளின் நிர்வாகிகள், நிபுணர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை குறித்த நிகழ்ச்சி புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் 143 ஆம் பிறந்த நாளை நினைவு கூரலுடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருத்தினராக கலந்து கொண்ட ஆளுநர் என். வேதநாயகம்,
ITEC திட்டம், இலங்கையின் அரசு அலுவலர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததைக் குறிப்பிட்டு, இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துடன், இந்தியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பயிற்சி செயல்முறைகளைப் பாராட்டினார்.
குறிப்பாக வேளாண் துறையில் பலர் இதைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். வடமாகாண வளர்ச்சிக்காக தொடர்ந்தும் இந்திய உதவியை வேண்டிக்கொண்டார்.
அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசத்குணராஜா தெரிவிக்கையில்,
சுப்ரமணிய பாரதியின் பார்வை மற்றும் இந்தியாவின் விண்வெளி, அணு நுட்பம் போன்ற முன்னேற்றங்களைப் பாராட்டினார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சிப் பயணத்தை "Incredible India" என வர்ணித்தார்.
ITEC போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்கள், இலங்கையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை எனத் தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தலைவர் சி.வி.சிவஞானம், இந்தியாவின் சாதனைகளை அதற்கான கட்டுப்பாடு மற்றும் முன்னோக்குப் பார்வையால் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.
சுப்ரமணிய பாரதியின் பார்வையில் இன்றைய இந்தியா-இலங்கை இணைப்பை அவர் நினைவு கூர்ந்தார். ITEC திட்டங்கள் இலங்கை அதிகாரிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் உறுதுணையாக உள்ளதாக பாராட்டினார்.
வடமாகாண தலைமைச் செயலாளர் எல்.இளங்கோவன், தெரிவிக்கையில்,
இந்திய அரசின் ITEC திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தார். "பரீட்டோ கோட்பாடு" மேற்கோள் காட்டி, 20% அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்பதால், 80% பெறுபேறுகள் பயன் அடையலாம் என தெரிவித்தார்.
இந்தியத் தூதர் சாய் முரளி கருத்து தெரிவிக்கையில்,
ITEC தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். 1964 இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், உலகளவில் 1,00,000 பேருக்கு பயிற்சி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
COVID-19 காலத்திலும் திட்டம் தடைபடாமல் செயல்பட்டது என்பதைக் குறிப்பிட்டார். ITEC இன் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர் அதிகாரிகள் சமூக மேம்பாட்டுக்காகச் செயல்படுகிறார்கள் என தெரிவித்தார்.