Friday 1 November 2024

வல்லை - அராலி வீதியை முழுமையாக திறக்குமாறு மக்கள் கோரிக்கை..!!!

SHARE

யாழ்ப்பாணம், வல்லை - அராலி வீதியின் மீதமுள்ள வீதியையும் மக்கள் பாவனைக்காக திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வல்லை - அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 34 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது.

குறித்த வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் 1 கிலோ மீற்றர் தூரமான வீதியே திறந்து விடப்பட்டுள்ளது.

மிகுதி வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளையே காணப்படுகிறது. அத்தனையும் விரைவில் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதும் அச்சுவேலி மற்றும் வடமராட்சி பகுதிகளில் வாழும் மக்கள் வலி வடக்கு மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு வருவதற்கு, வல்லை - அராலி வீதியூடாக பயணித்து , வசாவிளான் சந்தியை அடைந்து , குரும்பசிட்டி ஊடாக சுற்றி , மீண்டும் வல்லை - அராலி வீதியை அடைந்தே தமது பயணத்தை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதனால் கட்டுவான் சந்திக்கும் வசாவிளான் சந்திக்கும் இடையிலான வல்லை - அராலி வீதியை இராணுவத்தினர் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று வசாவிளான் சந்தியில் இருந்து பொன்னாலை - பருத்தித்துறை வீதியும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளையே காணப்படுகிறது. அந்த வீதியையும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி வடக்கு பிரதேசத்திற்கு மக்கள் நேரடியாக பயணிக்க முடியாது. காங்கேசன்துறை வீதியூடாகவே பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதனால் வசாவிளான் சந்தியில் இருந்து பலாலி வடக்கு பகுதிக்கு செல்லும் பலாலி வீதியினையும் முற்றாக மக்கள் பாவனைக்கு இராணுவத்தினர் திறந்து விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை இன்றைய தினம் திறக்கப்பட்ட வீதியின் இரு மருங்கிலும் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் வீதியோரமாக உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்யவும் அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தன .

எனவே வீதியினை திறந்து விட்டது போன்று , அப்பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் , அப்பகுதியில் உள்ள ஆலயங்களை புனரமைத்து வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
SHARE