பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..!!!
நாடாளுமன்றத் தேர்தலை இம்மாதம் 14ஆம் திகதி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், அரசியல்யாப்புக்கு முரணானது என்று உத்தரவிடக்கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் நீதியரசர்களான ப்ரீதிபத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்ணாண்டோ ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.
பொதுத் தேர்தல் திகதி சட்டத்துக்கு உட்பட்டதில்லை என்று உத்தரவிடக் கோரி சமூக செயற்பாட்டாளரும் நாம் சிறிலங்கா தேசிய அமைப்பின் இணைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
பொதுத் தேர்தலுக்கான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனுதாரரின் கூற்றுப்படி, தேர்தல் விதிகளின்படி வேட்பு மனு ஏற்பு நிறைவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்குக் குறையாத அல்லது ஏழு வாரங்களை விட அதிகரிக்காத காலப்பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அதன்படி ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு இறுதி செய்யப்பட்டதிலிருந்து பார்க்கும் போது நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 29ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் ஜனாதிபதி இதனை மீறி, 14ஆம் திகதியே தேர்தலை நடத்துவதாக அறிவித்திருப்பது அரசியல் யாப்புக்கு முரணானது என்று அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த திகதி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது என்றும் சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் மன்றுரைத்தார்.
இதன் அடிப்படையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.