தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை சிதைத்து விட்டார்கள் - சட்டத்தரணி வி. மணிவண்ணன்..!!!
தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைவர் உருவாக்கினார். இன்று தேர்தல் களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் போய்விட்டது. இது தான் தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்தவர்களின் சாதனை என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
இந்த தடவை வாக்களிக்கும் போது உங்களிடம் நீங்களே கேட்டு கொள்ளுங்கள் , யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் அரசியல்வாதிகளால் தமிழ் மக்களுக்கு கிடைத்த மாற்றம் என்ன என
ஒவ்வொருவரும் தேர்தலில் வாக்களிக்கும் போது , இதனை நிச்சயமாக உங்களிடமே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்
கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்றவர்களை இரண்டு வகையாக பிரித்துக்கொள்ள முடியும்.
ஒன்று தமிழ் தேசிய அரசியலை நாங்கள் முன்னெடுக்க போகின்றோம் எங்களுடைய மாவீரர்களின் கனவுகளை சுமந்து சென்று விடுதலையை வென்றெடுக்க போறோம் என சொல்பவர்கள்.
அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்ளாக இருந்து என்னத்தை செய்தார்கள் ?
தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைவர் உருவாக்கினார். இன்று தேர்தல் களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் போய்விட்டது. இதுவா தமிழ் தேசியம் பேசும் அரசியல் வாதிகளின் சாதனை
தமிழ் தேசியம் பேசி சமஸ்டியை பெற்று விடவில்லை. ஆக குறைந்தது மாகாண சபை காலம் முடிந்தவுடன் , அடுத்த மாகாண சபை தேர்தலை நடாத்த கூட இந்த அரசியல்வாதிகளால் முடியாமல் போயுள்ளது.
தமிழ் தேசியம் பேசி இதுவரையில் ஒன்றையும் சாதிக்காதவர்கள், மீண்டும் உங்கள் முன் வந்து இன்னும் ஐந்து வருடங்கள் தாருங்கள் என நிற்கின்றார்கள்
நாங்கள் இன்னுமொரு ஐந்து வருடங்களுக்கு ஆணை கொடுத்தால் , தமது கட்சி பிரச்சனையை நீதிமன்றில் தீர்க்கவே அவர்களுக்கு காலம் போதும் தமிழ் மக்களுக்கு எதுவும் பெற்று தர மாட்டார்கள்
மற்றைய தரப்பு பொருளாதாரத்தை கட்டி எழுப்புகிறோம் , வேலை வாய்ப்புக்களை பெற்று தருகிறோம் என்கிறார்கள். வடக்கில் நான்கு மாவட்டங்கள் வறுமை கோட்டின் கீழ் உள்ளது. இளைஞர்கள் யுவதிகள் வேலை வாய்ப்புகளை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
ஆகவே இருவருமே எதனையும் சாதிக்கவில்லை.
தமிழ் மக்கள் கூட்டணியை தவிர ஏனைய காட்சிகளில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றில் இருந்தும் தமிழ் மக்களின் அரசியல் உரிமையும் வெல்ல வில்லை பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பவில்லை. இந்த தரப்புக்களுக்கு தான் மீண்டும் மீண்டும் வாக்களிக்க போகின்றீர்களா?
எங்கள் வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்திக்கொண்டு , எங்கள் மரபு சின்னங்களை மீட்டெடுத்து அதற்கு உயிர் கொடுத்துக்கொண்டு யாழ்ப்பாண மாநகரை மேம்படுத்திய ஒரே தரப்பு நாங்கள் தான் அதற்காக எங்களை பயங்கரவாதிகள் என கைது செய்தார்கள்.
தென்னிலங்கை மக்கள் பெரும் அரசியல் மாற்றத்தை செய்துள்ளார்கள். காலாகாலமாக அவர்களை ஏமாற்றி வந்த அரசியல் தரப்புக்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். 70 -75 வருட வரலாறுகளை கொண்ட கட்சிகளை இல்லாமல் செய்துள்ளார்கள். புதிய அரசியல் கலாச்சாரத்தய் ஏற்படுத்தி உள்ளார்கள்.
அத போல தமிழ் மக்களின் அரசியல் வாழ்வியலை சிதைத்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எங்கள் அரசியலை முன்னெடுத்து செல்ல இளையவர்களான நாங்கள் உங்கள் முன் வந்துள்ளோம். இந்த அரசியல் மாற்றத்தை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறோம் என மேலும் தெரிவித்தார்.