பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தேர்தல் கண்காணிப்பில் பங்கேற்கும் ஆசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஐரோப்பிய அமைப்பு உள்ளிட்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.