யாழில் சட்டத்தரணியின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் திருட்டு..!!!
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணியின் குடும்பத்தினரின் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சட்டத்தரணியின் குடும்பத்தினர் இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த களவு இடம்பெற்றதாக பொலிஸார் கண்டறிந்தனர்.
அதனை அடுத்து பணிப்பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் வீட்டில் களவெடுத்த குற்றத்தில் மற்றைய சந்தேகநபரையும் கைது செய்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.