பொலிஸாரின் நடவடிக்கைகளை பொதுமக்கள் வீடியோ எடுக்கலாம் - பதில் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு..!!!
பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை காணொளி (வீடியோ) காட்சிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வழங்கிய உத்தரவு ஒன்றின் படி, பொது மக்களின் இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானதாகவோ அல்லது சட்டத்திற்கு எதிரானதாகவோ கருதப்படாது என்று பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களால் பெறப்படும் காணொளிகள் நாட்டின் சட்டங்களின்படி, குற்றவியல் மற்றும் குடியியல் வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பாதுகாவலரை வீடியோ எடுத்ததற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தொன்றில் சிக்கிய நபரை அண்மையில் வாரியபொலவில் அச்சுறுத்திய சம்பவத்தின் பின்னணியில் பதில் பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்தும், பொலிஸ் அதிகாரியின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இவ்வாறானதொரு நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் தலையீட்டை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.
“வாகனத்தை காணொளி எடுத்த ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியது வெளிப்படையானது. அது தவறு. அவரால் அவ்வாறு செய்ய முடியாது. இதுபோன்ற சம்பவத்தை காணொளி எடுப்பது எந்த நபரின் உரிமையும்,'' என்றார்.
அமைச்சரின் அறிவிப்பை பின்பற்றி, கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளின் இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் செயல்களை பொதுமக்கள் காணொளி எடுக்கலாம் என பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.