Wednesday, 16 October 2024

யாழில். 16 பவுண் நகைகள் திருட்டு - ஐந்து சந்தேகநபர்கள் கைது..!!!

SHARE

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த 10ஆம் திகதி பகல் வேளையில் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 16 பவுண் தங்க நகைகள் மற்றும் இலட்ச ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் தொலைபேசி உள்ளிட்டவற்றை திருடி சென்று இருந்தனர்.

வீட்டில் கணவன் மற்றும் மனைவி வசித்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற சமயம் வீட்டினுள் புகுந்த திருடர்கள் நகைகளை திருடி சென்ற சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன.


கமராக்களில் பதிவான காணொளி ஆதாரங்களுடன் , வீட்டார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர்கள் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் அடிப்படையில் திருட்டு நகைகளை வாங்கிய சந்தேக நபர்கள் இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து திருட்டு நகைகள் சில உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.

அத்துடன் திருட்டு நகைகளை விற்று பணத்தினை பெற்ற இரண்டு பெண்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நகை விற்ற பணத்தின் ஒரு தொகையான 7 இலட்ச ரூபாயும் , நகை விற்ற பணத்தில் வாங்கிய மின் உபகரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஐவரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE