Monday 23 September 2024

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் - ஜனாதிபதி அநுர உறுதி..!!!

SHARE

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும் அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன்.தேர்தலை நடத்துவதும் அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல. எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.அவசியமான தீர்மானங்களை மேற்கொள்ள ஒருபோதும் தயங்க மாட்டேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், சவால்மிக்க பொருளாதார சூழலை கொண்ட நாட்டையே பொறுப்பேற்றுள்ளேன். என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன். அதனை செய்து இந்த சமூகத்துக்கு நிரூபித்துக்காட்டுவேன். நாடு என்ற ரீதியில் எம்மால் தனித்து செயற்பட முடியாது. நாம் அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் பயணிப்போம் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை (23) பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது நாட்டின் ஜனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு மக்களால் தம்மை ஆள்வதற்கான ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதாகும். இருப்பினும் தேர்தலின்போது வாக்குகளை அளித்தல் மற்றும் ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வது மாத்திரம் ஜனநாயகமல்ல. அது ஜனநாயகத்தின் ஓர் அடிப்படை அம்சமாக அமைந்த போதிலும் எமது நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்த கட்டமைப்புக்களின் பலம் பொருந்திய தன்மை அவசியமென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

எனவே நான் முதலில் எமது நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.இந்நாட்டின் ஜனநாயகத்துக்காக எனது உயர் அர்ப்பணிப்பினை எனது பதவிக்காலத்தில் வழங்குவேன். எமது நாட்டில் தோ்தலொன்றின்போது அதிகாரப் பரிமாற்றத்தின் போது அது ஜனநாயக ரீதியாக இடம்பெற்ற வரலாறு நிலவுகிறது.

தோ்தலொன்றின்போது இடம்பெறுகின்ற அதிகார பரிமாற்றத்தை எந்தவொரு தலைவரும் நிராகரிப்பதில்லை. அதற்கிணங்க செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் மக்களாணையை சுமுகமாக ஏற்றுக்கொண்டு இந்த ஜனநாயக ரீதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கான அவருடைய அர்ப்பணிப்பையும் முன்மாதிரியான தன்மையையும் வெளிக்காட்டியமைக்காக நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

எங்களுக்கு சவால்கள் நிறைந்த ஒரு நாடே கிடைக்கப்பெற்றுள்ளது.எமது அரசியலில் இதைவிட பரிசுத்தமாக்கப்படவேண்டிய மக்கள் பாரியளவில் எதிர்பார்க்கின்ற சாதகமான அரசியல் கலாச்சாரமொன்றின் தேவை நிலவுகிறது.நாங்கள் அதற்காக அர்ப்பணிப்பு செய்யத்தயார்.

எமது நாட்டின் அரசியல்வாதி மற்றும் அரசியல் பற்றி பிரஜைகள் மத்தியில் பாதகமான ஓர் அபிப்பிராயமே நிலவுகிறது.அது பொருத்தமற்ற ஒரு இடமென்ற கருத்தே நிலவுகிறது.எனவே உயர் அளவில் மீண்டும் அரசியல் பற்றியும் அரசியல்வாதி பற்றியும் மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக எமது தரப்பில் பணிகளை முன்னெடுக்கத்தயாராக இருக்கிறோம்.

அத்துடன் எங்களுக்கு கிடைக்கின்ற இந்த நெருக்கடியானது வெறுமனே ஓர் அரசாங்கம் அல்லது அரசியல் கட்சி அல்லது ஒரு தனிநபரால் மாத்திரம் கடந்து செல்ல முடியாது. ஏனென்றால் இதற்கு முன்னரும் நான் ஒரு மாயாஜால வித்தைக்காரன் அல்லவெனக் கூறியிருக்கிறேன். நான் ஒரு மெஜிக்காரனல்ல. நான் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை. ஆற்றல்கள் இருக்கின்றன.ஆற்றாமைகளும் இருக்கின்றன.

நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன.அறியாத விடயங்களும் இருக்கின்றன.ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை கொண்டு அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும்.

அதனால் அந்த கூட்டணியில் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும். அதுபோலவே இந்த நெருக்கடியை நிறைவு செய்யும் போது அனைத்துத் துறைகளையும் சோ்ந்த பொதுப்பிரஜைகளுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது.அந்தப்பொறுப்பினை ஈடேற்றுவதற்காக நான் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

ஆனால் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு உள்ளது. இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி செய்வேன். அதனை இந்த சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவேன்.

குறிப்பாக எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப்பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமர்ந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.

எமது நாட்டை கட்டியெழுப்புகையில் வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள்.

எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

இறுதியாக எமது நாட்டின் ஜனநாயகத்தினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். அவ்வாறு தெரிவு செய்து கொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்.எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.

எனவே எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக் காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது.

அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.எதிர்காலத்தில் இவையனைத்துமே நடைமுறையில் சாத்தியமானதாக அமைகின்ற அனுபவத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.அதற்காக உங்களுடைய ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்றார்.
SHARE