Tuesday, 24 September 2024

பொதுத்தேர்தலை நடத்த தயாராகவே உள்ளோம் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபா செலவாகும் - தேர்தல்கள் ஆணைக்குழு..!!!

SHARE

பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தயாராகவுள்ளோம்.

பாராளுமன்றம் கலைத்து ஜனாதிபதியால் வெளியிடப்படும் அதிவிசேட வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். பொதுத்தேர்தல் செலவுகளுக்கு 11 பில்லியன் ரூபாய் அவசியமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு முழுமையாக உள்ளது. பாராளுமன்றத்தை கலைத்தவுடன் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அறிவித்தால் அதற்கமைய செயற்பட ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கலைத்து வெளியிடும் வர்த்தமானியில் பொதுத்தேர்தல் வாக்கெடுப்பு திகதி, புதிய பாராளுமன்ற அமர்வு உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்படும்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் 7 முத்ல் 17 நாட்களுக்குள் போட்டியிட உத்தேசிக்கும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஐந்து முதல் 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான நிதியை திறைச்சேரி ஒதுக்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்றார்.
SHARE