Friday 12 July 2024

யாழில். இ.போ ச ஊழியர் கஞ்சாவுடன் கைது..!!!

SHARE

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரும், அவரது நண்பரின் தாயாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் , வீதியில் பயணித்த காரொன்றினை வழிமறித்து சோதனையிட்ட வேளை காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து காரினை கைப்பற்றிய பொலிஸார் , காரினை செலுத்தி வந்த இலங்கை போக்குவரத்து ஊழியரான வவுனியாவை சேர்ந்த நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும், அவரது காரினையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் , தன்னுடன் இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் கொடிகாமம் பகுதியை சேர்ந்த நபரே தனக்கு கஞ்சாவை விநியோகித்தார் என தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து கொடிகாம பகுதியில் உள்ள குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்ட வேளை வீட்டில் இருந்த பிரதான சந்தேகநபர் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அந்நிலையில் பொலிஸார் வீட்டினுள் சோதனை நடாத்திய போது , வீட்டில் இருந்து 87 கிலோ 67 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்த தப்பி சென்ற சந்தேகநபரின் தாயாரை பொலிஸார் கைது செய்தனர்.

காரில் கஞ்சாவுடன் கைதான நபர் மற்றும் , தப்பி சென்ற சந்தேகநபரின் தாயார் ஆகிய இருவரையும் விசாரணைகளின் பின்னர் பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
SHARE