Monday 11 March 2024

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் மேலுமொரு தகவல்..!!!

SHARE

கனடாவில் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் 6 இலங்கையர்கள், அவர்களின் உறவினரான ஒலங்க்லை இளைஞரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பான மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கொலைகளுடன் தொடர்புடையவர் என கூறப்படும் 19 வயதுடைய மாணவன் பயன்படுத்திய பிற ஆயுதங்கள் தொடர்பில் ஒட்டாவா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலை நடந்த வீட்டில் உள்ள இரத்தக் கறைகளை கனடா அதிகாரிகள் சுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சந்தேகநபரின் உறவினர்கள் எவரும் இதுவரை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளவில்லையென ஒட்டாவாவிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவனில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட 6 பேர் கடந்த ஆறாம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சந்தேகநபரான 19 வயதுடைய பெப்ரியோ டி சொய்சாவிடம் ஒட்டாவா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதம் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒட்டாவா காவல்துறையினர் கூறியதுடன், கொலைக்கு வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் தாய் மற்றும் தந்தையின் வசிப்பிடம் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஒட்டாவாவிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் , அவரது உறவினர்கள் எவரும் உயர்ஸ்தானிகரகத்தை தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் கொலைக்கு வருத்தம் தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சு, கொல்லப்பட்டவர்களின் இலங்கையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகளை எளிதாக்குவதாகவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE