Sunday 10 March 2024

யாழ். இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் கைது..!!!

SHARE

வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக 60 இலட்ச ரூபாய் பணத்தினை நபர் ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண் , யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில் , வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் என , வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல் , விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார்.

அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தினை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்ச பணத்தினை வழங்கியுள்ளார்.

பணத்தினை வழங்கியவர் தனது வெளிநாட்டு , பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதனை கண்டு பிடித்துள்ளனர்

கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள் , யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
SHARE