Thursday, 7 March 2024

வடக்கின் போர் ஆரம்பம்..!!!

SHARE

வரலாற்று பராம்பரியமிக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி இம்முறை 117ஆவது முறையாக இடம்பெறுகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் முன்னதாக ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மைதானச் சொந்தக்கார அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கியிருந்தனர். பின்னர் அவ்வணிக்காக சகாதேவன் சயன்தன் மாத்திரம் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்த முன்னேறிய அவ்வணி இறுதியில் 56.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிற்காகப் பெற்றது.

யாழ். மத்தி அணியின் துடுப்பாட்டத்தில் சகாதேவன் சயன்தன் 6 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் எடுத்தார். அதேவேளை சென்.ஜோன்ஸ் பந்துவீச்சில் அருள்சீலன் கவிஷன் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், குகதாஸ் மாதுளன் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியானது போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவின் போது 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து பலமான நிலையில் காணப்படுகின்றது.

சென். ஜோன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழந்த வீரர்களில் உயதனன் அபிஜோய்சாந்த் 39 ஓட்டங்கள் எடுத்திருக்க, களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அன்டர்சன் சச்சின் 36 ஓட்டங்களுடன் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி – 157 (56.5) சகாதேவன் சயன்தன் 55, அருள்சீலன் கவிஷன் 34/5, குகதாஸ் மாதுளன் 52/3

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி – 109/2 (30.5) உயதனன் அபிஜோய்சாந்த் 39

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்..

படங்கள்: ஐ.சிவசாந்தன்




















SHARE