தற்காலிகமாக மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!!!
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச முறைமைகளுக்கு அமைய, 45 நாட்களுக்கு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கட்டாய தேவைகளுக்காக மூடப்பட வேண்டும்.
கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அத்தியாவசிய திருத்தப்பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது.
எனினும் குறித்த காலப்பகுதியில் நாட்டில் எரிப்பொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான எரிப்பொருள் கையிருப்பை வைத்திருப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான சகல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.