காதலிக்க நேரமில்லை: ஜெயம் ரவிக்கு திருப்பம் அளிக்குமா?
‘வணக்கம் சென்னை’, ‘காளி’ படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ஜெயம் ரவியின் 33-வது படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. தற்போது காதலிக்க நேரமில்லை படத்தின் இசை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் அதுகுறித்த அப்டேட் ஒன்றை பாடலாசிரியர் சினேகன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், “இசைப்புயல் A.R .ரகுமானின் இசையில், ஸ்ருதிஹாசனின் குரலில் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்திற்காக நான் எழுதியப் பாடல் பதிவானது”, என தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘இறைவன்’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஜெயம் ரவிக்கு அளிக்கவில்லை. இதனால் தற்போது அவர் நடித்து வரும் ‘காதலிக்க நேரமில்லை’ மீண்டும் அவருக்கு வெற்றிப் பாதையை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.