Saturday, 2 March 2024

சின்னத்திரை டூ வெள்ளித்திரை: ரக்‌ஷிதா மகாலட்சுமியின் ‘அடுத்த’ பயணம்..!!!

SHARE

சின்னத்திரை ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான நட்சத்திரங்களில் ஒருவர் ரக்‌ஷிதா மகாலட்சுமி. முந்தைய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை இவருக்காகவே பார்த்த ரசிகர் பட்டாளம் கணிசம். அதற்குப் பிறகு, அவரை சீரியல்களில் பார்க்க முடியவில்லை.

ஆனாலும், இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களுக்கு ஏதேனும் ஒரு ‘அப்டேட்டை’ தந்த வண்ணம் இருந்து வந்தார். இந்தநிலையில் ரக்‌ஷிதா மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் என்ற தகவலும் அதிலொன்றாக அமைந்துள்ளது.

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ரக்‌ஷிதா, ஸ்டார் ஸ்வர்ணா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மேக மண்டலா’ தொடரில் அறிமுகமானார். 2011-ல் விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலமாகத் தமிழ் ரசிகர்களுக்குத் தெரிய வந்தார்.

அதன்பிறகு, பெரும்பாலும் தமிழ் தொடர்களைச் சார்ந்திருக்கும்படி பார்த்துக் கொண்டார். ’இளவரசி’, ‘சரவணன் மீனாட்சி சீசன் 2 & 3’, ’நாச்சியார்புரம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2’, ’இது சொல்ல மறந்த கதை’ ஆகியன அதில் குறிப்பிடத்தக்கவை.

தெலுங்கு, மலையாள சீரியல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட அவர் தலைகாட்டியிருக்கிறார். இது தவிர விளம்பரப் படங்கள், தனியார் நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டால் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றியிருக்கிறார்.

அதன் வழியே பெரும் ரசிகக் கூட்டத்தையும் சம்பாதித்திருக்கிறார். திரையுலகைப் பொறுத்தவரை, 2012-ல் வெளியான ‘பாரிஜாதா’ என்ற கன்னடப் படத்திலும், 2015-ல் வெளியான ‘உப்புக்கருவாடு’விலும் இவர் தலைகாட்டியிருக்கிறார்.

அவ்வளவுதான். ஆனால், இம்முறை வெள்ளித்திரையில் வந்து போனால் மட்டும் போதாது என்ற உறுதியோடு மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்த ரக்‌ஷிதா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

கன்னட நடிகர் ஜக்கேஷின் நடிப்பில் ‘ரங்கநாயகா’ எனும் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனை குருபிரசாத் இயக்கியிருக்கிறார்.

கன்னடத் திரையுலகம் மற்றும் அரசியல் நடப்புகள் குறித்து விமர்சிக்கும் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் ஜக்கேஷ் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

அதனால், இந்தப் படம் பேசும் அரசியல் அங்கு என்னென்ன அலைகளைத் தோற்றுவிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. அதில் ரக்‌ஷிதாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு, அவர் தமிழில் நடித்துள்ள படங்களின் அறிவிப்புகளும் வெளியாகும் என்று தெரிகிறது.

ரக்‌ஷிதாவின் ரசிகர்களுக்கு இப்படங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பது அவை வெளியானால்தான் தெரிய வரும்.

இப்போதைக்கு இந்த ட்ரெய்லரை உற்றுநோக்கி ‘ஹிடன் டீடெய்ல்ஸ்’ கண்டுபிடிப்பவர்களால் மட்டுமே அதையும் கணிக்க முடியும்!
SHARE