Friday 1 March 2024

தமிழ்ப் பிரதேசத்தில் நச்சுக் கலைகளின் ஊடுருவல்களை தடை செய்ய வேண்டும். கலாநிதி க. சிதம்பநாதன்..!!!

SHARE

ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுவோம் என்ற கருப் பொருளிலான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் கலாநிதி க. சிதம்பரநாதனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ,

கலை நிகழ்ச்சிகள் என்றால் என்ன?

கலை நிகழ்ச்சிகளை எப்படி நிகழ்த்துவது?

கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் போது
மக்கள் மத்தியில் ஏற்படக் கூடிய விளைவுகள் யாவை?
போன்ற வினாக்கள் தொடர்பாகவும் , அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த
இசை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பல குழப்பமான கதையாடல்கள் நமது சமூகத்தில் நிலவுகின்ற
பின்னணியில் ஈழத்தமிழரிடையே கடந்த காலங்களில்

நிலவிய கலை நிகழ்ச்சிகள் எத்தகையன?

அவை நிகழ்த்தப்பட்ட முறைமைகள் எத்தகையன?

அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய விளைவுகள் யாவை?

என்பவை போன்ற விளக்கங்களுடன் எதிர்காலத்தில் எமது சமூகத்தை ஆற்றல் மிகு சமூகமாக மாற்றுவதற்கு நமக்குத் தேவைப்படும் கலை நிகழ்ச்சிகள் பற்றிய உரையாடல்களும் இடம்பெற்றன.

மேலும்

ஊடகர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கூடியிருந்த இவ் அரங்கில்
கலை என்பது பற்றியும் பண்டைய தமிழரிடையேயும் தேசிய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த கலைகள் பற்றியுமான விளக்கங்கள் அரங்க நிகழ்வுகளினூடாக நிகழ்த்தத்தட்டன.

வலிமையான கலைப்பாரம்பரியத்தை உடைய தமிழர்கள் மத்தியில் இன்று நச்சுக்கலைகள் ஊடுருவப்பட்டிருப்பது பற்றியும் , அவை விரைவில் தடைசெய்யப்படவேண்டும் ஊர்தோறும் மக்கள் கலை உருவாகக்கத்திற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனான உரையாடல்களும் இடம்பெற்றன.

ஆடல்கள், பாடல்கள், கதையாடல்கள் என ஆற்றுகைகள் வெளிப்பட்டன

கலைப்பயணத்தில் ஈடுபடும் மனிதர்கள் மற்றவர்களை பாவனை செய்யும் நிலையில் இருந்து விடுபட்டு, தாமாகவே செயற்படும் நிலைக்கு வந்து சக்தி மயமான நிலையை அடைதல் முடியும் என்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நிகழ்வாக இவ் கலைச்செயற்பாடு அமைந்திருந்தது.

2009 இன அழிப்பின் பின் எமது மக்கள் மத்தியில் தேசிய நீக்கம் .
மக்கள் நுகர்வு கலாசாரத்தினூடாக குறிப்பாக நச்சுக்கலைகள் ஊடாக மனக் குழப்பங்களுக்கும் தாழ்வுச் சிக்களுக்குட்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தாழ்வுச் சிக்கலில் இருந்து விடுபட்டு தாமாக செயற்படும் இரு செயலூக்க நிலைக்கு தூண்டுகின்ற அவசியம் பற்றி அரசியல் ஆய்வாளர்களரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் எடுத்துக் கூறினார்.

கலை என்பது மக்களை செயலூக்கமான சக்தி நிலைக்கு கொண்டு வரும் வலிமையான சாதனம் என எடுத்துக் கூறிய கலாநிதி க. சிதப்பரநாதன் இன்று எமது சமூகத்தில் குறிப்பாக புத்தி ஜீவிகள் மத்தியில் கலைபற்றிய திரிவு பட்ட விளக்கம் நிலவிவருவதையும் அதனால் கலையின் வலிமையை அவர்கள் அறியாதிருப்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடையே படிப்படியாக கலை பற்றிய அனுபவத்தை பரப்பிச் செல்ல வேண்டிய. அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

அத்தகைய செயற்பாட்டில் இணைவதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

இன்று பலர் 'Digital media' டிஜிற்றல் மீடியா வில் மூழ்கி கிடந்தாலும் அது ஈற்றில் ஒரு மன அழுத்த நிலைக்குக் கொண்டு போகும் என்றும் , உண்மையில் மனிதர்கள் நேரடியாக பிரசன்னமாகி உயிர்ப்பான ஊடாட்ட அனுபவத்தைப் பெற விரும்புகிறார்கள் என்ற விடயம் இந்நிகழ்வில் பங்கு கொண்டவர்களின் பகிர்வில் மேற்கிளம்பிய ஒரு முக்கிய விடயம்.இத்தகைய ஒரு கலை அனுபவத்தை மக்கள் பெறும் வகையில் கலைநிகழ்ச்சிகள் ஊர் ஊராக நிகழ்த்தப்படவேண்டும் என்ற உறுதியும் கூடியிருந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட நிகழ்வாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

கலையில் மனிதம் உயிர்க்கும்.

யாழ்.தர்மினி பத்மநாதன்.







SHARE