Wednesday, 14 February 2024

பிப்ரவரியில் வெளியான காலத்தால் அழியாத காதல் படங்கள் : ஒரு பார்வை..!!!

SHARE

காதலர் தினம் கொண்டாடும் வழக்கம் தமிழ்நாட்டில் எப்போது முதல் பரவலானது என்று தெரியவில்லை. ஆனால், தொண்ணூறுகளுக்குப் பிறகே பட்டிதொட்டியெங்கும் பிரவாகமெடுத்தது என்று குறிப்பிட முடியும். தினசரிகள், பத்திரிகைகளில் அது தொடர்பாக வெளியான தகவல்களே அதற்குக் காரணம். அதன் மூலமாக, அன்றைய தினம் காதலை வெளிப்படுத்தும், கொண்டாடும், திளைக்கும் அன்பர்களின் எண்ணிக்கை விஸ்வரூபமெடுத்தது.

வர்த்தகத்தைப் பெருக்கும் நோக்கில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், இல்லறம் செய்துவரும் எத்தனையோ தம்பதிகள் தங்களது காதலை மீளாக்கம் செய்யவும் அது கருவியாக விளங்குவதைப் புறக்கணித்துவிட முடியாது.

அன்றைய தினம் ஆடை அணிகலன்கள், உணவுகள், வாழ்த்து அட்டைகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் தொடர்பான வியாபாரம் மட்டுமல்லாமல் இதர பொழுதுபோக்கு அம்சங்களும் கூடக் களைகட்டும். அதில் முக்கிய இடம் வகிப்பது திரைப்படங்கள். அதிலும் காதலின் வெவ்வேறு கோணங்களைக் காட்டும் கதைகள் பெரிய வரவேற்பைப் பெறும். படம் பார்க்கும் ஜோடிகள் இடையேயான இடைவெளியை மேலும் குறைக்கும்.

காதலர் தினத்தை முன்னிட்டு திரைப்படங்களை வெளியிடும் வழக்கம் இப்பூமிப்பந்தெங்கும் இருந்து வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் வெளியாகிக் காதலைக் கொண்டாடிய தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கையும் கணிசம். அப்படங்களின் வெளியீடு தன்னியல்பாக நிகழ்ந்ததா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என்று ரசிகர்களுக்குத் தெரியாது. ஆனால், இப்போது பார்த்தாலும் அந்த படங்கள் தரும் பரவசத்தினை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

காதலே.. காதலே..!

சின்னத்தாயி

விக்னேஷ், பத்மஸ்ரீ, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’சின்னத்தாயி’ திரைப்படம் 1992, பிப்ரவரி 1 அன்று வெளியானது. ’நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடல் இன்றும் பசுமையை விதைக்கக்கூடியது. என்னதான் சாமியாடி, சாதீயம், ஆணாதிக்கம் என்று பல பிரச்சனைகளைப் பேசினாலும், இப்படத்தின் அடிநாதமாக நாயகன் நாயகியின் அழுத்தமான காதலே இருக்கும்.

டிஷ்யூம்

2006, பிப்ரவரி 2 அன்று வெளியானது இயக்குனர் சசியின் ‘டிஷ்யூம்’. ஒரு ஸ்டண்ட் கலைஞனை கவின்கலைக் கல்லூரியில் பயிலும் பெண்ணொருத்தி காதலிப்பதாகச் சொன்னது இப்படம். என்னதான் ஸ்டண்ட் கலைஞர்களின் ‘கரணம் தப்பினால் மரணம்’ வாழ்வு முறையைச் சொன்னாலும், ‘ரிஸ்க் பாஸ்கர் என்னோட லவ்வர்தாம்பா’ என்று ஜீவாவைப் பார்த்துக் கிறங்கும் சந்தியாவின் முகத்தை நம்மால் மறக்க முடியாது.

பண்ணையாரும் பத்மினியும்

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெயபிரகாஷ், துளசி ஆகியோர் நடிப்பில் ’பண்ணையாரும் பத்மினியும்’ 2014, பிப்ரவரி 7 அன்று வெளியானது. விஜய் சேதுபதியின் ஏறுமுக காலத்தில் வெளியானபோதும் இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. காரணம், அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்குமான காதல் காட்சிகள் குறைவு. அது மட்டுமல்லாமல், பத்மினி எனும் காரை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி, இதில் பண்ணையாராக வந்த ஜெயபிரகாஷுக்கும் அவரது மனைவியாக நடித்த துளசிக்குமான காதல் திரையை மீறி நம் மனதைத் தொடும். தமிழ் கலாசாரமே தெரியாத வடமாநிலங்களில் இப்படத்தின் இந்தி பதிப்புக்கு யூடியூபில் கிடைத்த வரவேற்பு அதனைச் சிறப்புறச் சொல்லும்.

தீபாவளி

ஜெயம் ரவி நடித்துள்ள காதல் திரைப்படங்களில் அவரது ரசிகக் கண்மணிகளுக்கு மிகவும் பிடித்த தீபாவளி திரைப்படம் 2007, பிப்ரவரி 9 அன்று வெளியானது. யுவன்சங்கர் ராஜா தந்த ’காதல் வைத்து’, ‘கண்ணன் வரும் வேளை’, ‘போகாதே போகாதே’ பாடல்கள் இன்றும் புத்துணர்ச்சி தரக்கூடியவை.

சித்திரம் பேசுதடி

ரவுடியைக் காதலிக்கும் கல்லூரிப் பெண் என்ற ‘டெம்ப்ளேட்’ தமிழ் சினிமாவில் சகஜமானதை ‘புதிய பாதை’ போன்ற படங்களே தொடங்கி வைத்தன. அதனைப் பின்பற்றியவற்றில் ஒன்று ‘சித்திரம் பேசுதடி’. மிஷ்கினின் முதல் படமான இப்படத்தில் ரவி பிரகாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் பக்குவமற்ற முறையில் கையாளப்பட்டிருந்தன; அதையும் மீறி நரேன், பாவனாவின் காதல் காட்சிகளும் சுந்தர்.சி.பாபுவின் மெலடி மெட்டுகளும் இதனை நல்லதொரு காதல் சித்திரமாக ரசிகர்களைக் கொண்டாடச் செய்தது. இத்திரைப்படம் 2006, பிப்ரவரி 10 அன்று வெளியானது.

காலமெல்லாம் காதல் வாழ்க

நடிகர் முரளி என்றால் நம் நினைவுக்கு வருவது ‘இதயம்’ படம் தான். கிட்டத்தட்ட அதே தொனியிலமைந்த பாத்திரத்தை ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் அவர் ஏற்றிருந்தார். தொண்ணூறுகளின் இறுதியில் ‘வித்தியாசமா ஒரு காதலைச் சொல்லணும்’ என்ற உத்தியின் அடிப்படையில் வெளியான படங்களில் இதுவும் ஒன்று. இது 1997, பிப்ரவரி 12 அன்று வெளியானது.

தினம்தோறும், சிவா மனசுல சக்தி

பிப்ரவரி 13 அன்று வெளியான படங்களில் ’தினம்தோறும்’, ‘சிவா மனசுல சக்தி’ இரண்டும் அக்காலச் சூழலில் நிலவிய காதல் உணர்வுகளைப் பிரதிபலித்தன. அதேநேரத்தில், இன்று பார்த்தாலும் ரசிக்கத்தக்கவையாக இவை இருக்கும். காரணம், காதலை மிக யதார்த்தமாகவும் அதேநேரத்தில் நகைச்சுவையாகவும் சொன்ன இவற்றின் திரைக்கதை. அந்த வகையில் இப்படங்களின் இயக்குனர்கள் நாகராஜ், ராஜேஷிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

நண்பர்கள், மின்னலே

காதலர் தினத்தன்று வெளியானால் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற நோக்கில் சில படங்கள் வரும். அந்த வகையில், தொண்ணூறுகளில் 1991ல் வெளியானது ஷோபா சந்திரசேகரின் ‘நண்பர்கள்’. அதேபோல, 2001இல் கௌதம் வாசுதேவ் மேனனை நமக்கு அறிமுகப்படுத்தியது ‘மின்னலே’. எண்பதுகள், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு இப்படங்கள் ‘காதல் பொக்கிஷமாக’ வசீகரிக்கும்.

ரோஜாக்கூட்டம், ஆஹா கல்யாணம்

80’ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த ஒரு தேவதை என்று பூமிகா சாவ்லாவைச் சொல்லலாம். அவரை ரசிப்பதற்காகவே, இயக்குனர் சசி நமக்குத் தந்த படம் ‘ரோஜாக்கூட்டம்’. 2002ல் வெளியான இப்படத்தில் தான் ஸ்ரீகாந்த் நாயகனாக அறிமுகம் ஆனார். பரத்வாஜ் தந்த ‘மொட்டுகளே மொட்டுகளே’, ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ’ பாடல்கள் நம்முள் நினைவுத்தந்திகளை மீட்டும்.

‘பேண்ட் பஜா பாரத்’ எனும் இந்திப் படத்தின் ரீமேக் ஆக 2014ல் வெளியானது ’ஆஹா கல்யாணம்’. அதனாலேயோ என்னவோ, இதை ‘டப்பிங்’ படம் என்று நினைத்துவிட்டது ரசிக உலகம். தெலுங்கில் இன்று ‘நவரச நாயகனாக’ திகழும் நானி தமிழில் நடித்த படமிது. அது மட்டுமல்லாமல், வாணி கபூர் என்ற ‘சைஸ் ஜீரோ’ அழகியை அழகுறக் காட்டியது இது. காதலின் கொண்டாட்டங்களை மட்டுமே நோக்க விரும்பும் ஜோடிகளை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடியது இப்படம்.

பிரியாத வரம் வேண்டும்

2001, பிப்ரவரி 16 அன்று வெளியானது கமல் இயக்கிய ‘பிரியாத வரம் வேண்டும்’. மலையாள ரீமேக்கான இப்படத்தில் நண்பர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் காதலில் விழ வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்பட்டிருக்கும். பிரசாந்த் – ஷாலினி நடிப்பில் உயர்நடுத்தர வர்க்கச் சூழலில் வாழ்பவர்களுக்கு உவப்பான இந்த விஷயத்தை மிக நுணுக்கமாகக் காட்டியது இப்படம். எனினும் ஷாலினியின் திருமணத்திற்கு பிறகு வெளியான இப்படம் அதனாலேயே பெரியளவில் கவனிப்பைப் பெறாமல் போனது.

காதலில் சொதப்புவது எப்படி?

2012, பிப்ரவரி 17 அன்று வெளியான திரைப்படம் ‘காதலில் சொதப்புவது எப்படி’. மேற்கத்திய படங்கள் பாணியில் காதலை அணுகியது இதன் திரைக்கதை. ஊடல், கூடல் என்று மாறி மாறித் தொடர்வதே காதல் வாழ்வின் சிறப்பு என்பதை நகைச்சுவையுடன் காட்டியதில் இது மிக முக்கியமானது.

சொல்லத் துடிக்குது மனசு

படத்தொகுப்பாளர் பி.லெனின் இயக்கிய ‘சொல்லத் துடிக்குது மனசு’, இளையராஜாவின் ஹிட் ஆல்பங்களில் ஒன்று. ‘பூவே செம்பூவே’, ‘தேன்மொழி’, ‘எனது விழி வழி மேலே’ பாடல்கள் இன்றும் இனிக்கும் ரகம். எண்பதுகளில் காதல் நாயகனாகத் திகழ்ந்த கார்த்திக்கை அழகுறக் காட்டிய படங்களில் இதுவுமொன்று. இப்படம் 1988, பிப்ரவரி 19 அன்று வெளியானது

ஆட்டோகிராப் 

இயக்குனர் சேரனை நாயகனாகத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடச் செய்த திரைப்படம் ’ஆட்டோகிராப்’. 2004, பிப்ரவரி 20 அன்று இது வெளியானது. ஆணும் பெண்ணும் பல காதல்களைக் கடந்தே இல்லறத்தில் நல்லறம் பேணுகின்றனர் என்பதை உரக்கச் சொன்னது. ‘பிரேமம்’ உட்படப் பல மொழிகளிலும் இதனைப் பின்பற்றிப் பல்வேறு ஹிட் படங்கள் உருவாக்கப்பட்ட காரணத்தால், இது ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ என்று சொல்வதே மிகச்சரி. இப்போதும், தங்களை ‘எனர்ஜி சார்ஜ்’ செய்துகொள்ள அங்கிள்கள், ஆன்ட்டிகளின் முதல் சாய்ஸ் இதுவே. காதலைக் கொண்டாடுபவர்கள் ‘பூமர்’களாக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையை இளைய தலைமுறைக்கு இப்படம் வழங்கும்.

பருத்தி வீரன், மொழி

2007, பிப்ரவரி 23 அன்று வெளியான தமிழ் படங்களில் ‘பருத்தி வீரன்’, ‘மொழி’ இரண்டும் மிக முக்கியமானவை. அதுவரையிலான தமிழ் திரைப்படங்களின் போக்கை மாற்றியமைத்த சிறப்புக்குரியவை. இரண்டும் வெவ்வேறு திசைகளில் காதலின் பரிமாணத்தைச் சொன்னவை. இவையிரண்டுமே கொண்டாடப்பட்டது தமிழ் ரசிகர்கள் காதலை எப்படியெல்லாம் ரசிக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.

அரங்கேற்ற வேளை

அதே பிப்ரவரி 23 1990ல் வெளியான ‘அரங்கேற்ற வேளை’யும் மிக முக்கியமானதொரு காதல் திரைப்படம். இதில், கிளைமேக்ஸ் காட்சியில்தான் பிரபு, ரேவதியிடம் தனது காதலை வெளிப்படுத்துவதாகக் காட்டப்பட்டிருக்கும். இதன் மலையாள மூலமான ‘ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் இருந்து இப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்வது அப்பாத்திரங்களின் காதலே. இருவரது ரசிகர்களும் தவறவிடக்கூடாத படம் இது.

முகவரி 

2001, பிப்ரவரி 25ல் வெளியான ’முகவரி’ அஜித்குமாரை அவ்வளவு இளமையாகக் காட்டியிருக்கும். அவர் நடித்த காதல் திரைப்படங்களில் முதலிடம் பிடிப்பதும் இதுவே.

விண்ணைத் தாண்டி வருவாயா

பிப்ரவரி 26, 2010 அன்று வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம், ஒரு ‘கல்ட் கிளாசிக்’ என்று போற்றத்தக்கது. ‘பெண் மனது ஆழம்’ என்று கவிஞர்கள் சொன்ன வார்த்தைகளுக்கு இதில் அர்த்தம் தந்திருப்பார் இயக்குனர் கௌதம் மேனன். இன்றளவும் அவரை மிமிக்ரி கலைஞர்கள் கிண்டலடிக்கப் பயன்படுத்தப்படும் படைப்பு இது. அந்த ஒரு விஷயமே, இப்படத்தின் புகழைச் சொல்லும். அதையும் தாண்டி சிம்புவையும் த்ரிஷாவையும் ‘மிகப்பொருத்தமான ஜோடி’யாக காட்டிய படம் இது. அந்த பாயிண்டை அடிக்கோடிட்டுக் கவனிக்கும் ஜோடிகள், இப்படத்தில் அவர்கள் இருவரும் பிரிந்துவிடுவதை மறந்துவிட வேண்டும்.

ரெட்டைவால் குருவி

பாலு மகேந்திராவின் ’ரெட்டைவால் குருவி’ – 1987, பிப்ரவரி 27இல் வெளியான இப்படம் ‘காத்துவாக்குல காதல்’ வகையறா படங்களுக்கு எல்லாம் முப்பாட்டனாக விளங்குவது. இளையராஜா இசையில், மு.மேத்தா எழுதிய ‘ராஜராஜ சோழன் நான்’ பாடலைக் கேட்டுக் காதல் உணர்வில் மூழ்கித் திளைக்காதவர்கள் இந்த உலகில் உண்டோ? மிக முக்கியமாக, இன்றைய திரைப்படங்களில் பெண் பாத்திரங்களை ‘போல்டாக’ காட்டுகின்றனர் என்று முழங்குபவர்கள், இதில் அர்ச்சனா, ராதிகாவின் பாத்திரங்களைக் கண்டால் வாய் மூடிக்கொள்வது நிச்சயம்.

வருஷம் 16

இயக்குனர் பாசில் குறித்து தமிழ் ரசிகர்கள் நினைத்துச் சிலிர்ப்பதற்கான ஒரு படைப்பு வருஷம் 16. அது மட்டுமல்லாமல் கார்த்திக் – குஷ்பு ஜோடியைக் கொண்டாடச் செய்வது. தன்னுடைய இரு வேறு மலையாளப் படங்களில் இருந்து இதன் திரைக்கதையை உருவாக்கியிருந்தாலும், அப்படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது இப்படம். இன்றளவும் கார்த்திக் ரசிகர்கள் கொண்டாடும் இத்திரைப்படம், காதலர் தினத்தைக் கொண்டாடாத காலகட்டத்தில் பிப்ரவரி 17, 1989 ஆண்டு வெளியானது.

கல்லுக்குள் ஈரம்

என்னதான் ‘லீப்’ ஆண்டில் மட்டும் பிப்ரவரி 29 வந்தாலும், அன்றும் சில படங்கள் வெளியானதை நாம் கவனித்தாக வேண்டும். அந்த வகையில் ‘சிறு பொன்மணி அசையும்’ எனும் தெய்வீக ராகத்தைத் தந்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தையும் நாம் கொண்டாடாமல் இருக்க முடியாது. இந்த படம் 1980ஆம் ஆண்டு வெளியானது.

மேற்சொன்ன படங்கள் மட்டுமல்லாமல், காதலைக் கொண்டாடும் படங்கள் தமிழில் ஏராளம் உண்டு. அவற்றைப் பார்த்து ரசிக்கும் காதலர்கள் ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது. அது, உங்களது காதல்களே அவற்றுக்கான ஆதாரம் என்பது..!
SHARE