தனியார் பேருந்துகளின் சேவை நாளையிலிருந்து வழமைக்கு திரும்பும்..!!!
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று மாலை ஆளுநர் செயலகத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த தனியார் பேருந்து உாிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கடற்றொழில் கமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தவிசாளர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இன்றைய கலந்துரையாடலில் வழங்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து பணி புறக்கணிப்பை கைவிட்டு நாளை முதல் வழமை போன்று சேவை முன்னெடுக்க உள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்திற்கான தனியார் மற்றும் இ.போ.ச நெடுந்தூர பேருந்து சேவைகள் அனைத்தும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து விரைவில் சேவையை முன்னெடுக்கப்படும் எனவும், ஒரு கிழமை மாத்திரம் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று மின்சார நிலைய வீதியில் இருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து தாம் சேவை முன்னெடுப்பதாக இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையினரும் இணைந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றிகையிட்டு தனியார் பேருந்து உாிமையாளா்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
இதன்போது போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று பிற்பகல் 6 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் குறித்த விடையம் தொடர்பில் கலந்துரையாடி உரிய தீர்வினை பொற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட தனியாா் பேருந்து உாிமையாளா்கள் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையிலேயே இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது