Wednesday, 14 February 2024

ரஜினியுடன் நேரடியாக மோதும் தளபதி விஜய்?

SHARE

மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்த், விஜய் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ படங்களுக்குப்பிறகு ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படமான வேட்டையனில் நடித்து வருகிறார்.

‘ஜெய்பீம்’ புகழ் த.செ.ஞானவேல் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் 80% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் ‘வேட்டையன்’ படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மறுபுறம் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தீபாவளிக்கு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய் 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகுகிறார் என்பதால் பண்டிகை தினத்தை ‘GOAT’ படக்குழு குறிவைத்துள்ளதாம்.

ஒருவேளை இது உறுதியாகும் பட்சத்தில் ரஜினிகாந்த் – விஜய் இருவரும் பாக்ஸ் ஆபிஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழ்நிலை வரலாம்.

இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருமா? இல்லை பந்தயத்தில் இருந்து இரண்டில் ஒருபடம் பின்வாங்குமா? என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும். அதுவரை நாமும் காத்திருப்போம்.
SHARE