இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிராக இருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்..!!!
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சரின் ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்குமாறும் தெரிவித்து கல், மண், கிறல் அகழ்வில் சட்ட ரீதியாக ஈடுபட்டு வரும் இரண்டு பேர் சவப்பெட்டியுடன் மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகத்துக்கு அருகில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை இன்று (19) ஆரம்பித்துள்ளனர்.
கல், மண், கிறவல் என்பனவற்றுக்கு சட்ட ரீதியாக அனுமதி பெற்று அகழ்வில் ஈடுபட்டு வருபவர்களின் 2024ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரத்தை, இராஜாங்க அமைச்சரின் சிபாரிசு இருந்தால் மட்டும் புதுப்பிக்க முடியும் என பிரதேச செயலாளர் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்து வரும் நிலையிலேயே, இராஜாங்க அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பாக உண்ணாவிரத போரட்டத்தில் இறங்கியுள்ள இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
செங்கலடி பிரதேசத்தில் கல், மண், கிறவல் என்பனவற்றுக்கு சட்ட ரீதியாக அனுமதி பெற்று பலர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2023 டிசம்பர் 31ஆம் திகதியுடன் அனுமதிப்பத்திரம் காலாவதியானதையடுத்து, 2024ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு போராட்டக்காரர்கள் இருவரும் பிரதேச செயலகத்துக்குச் சென்றபோதே பிரதேச செயலாளர் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பில் விடயங்களை முன்வைத்தோம். அவர் அந்த கடிதத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை பதில் எதுவும் இல்லை.
எனவே, நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. ஏற்கனவே கல், மண், கிறவல் அகழ்வதற்கு அது சார்ந்த திணைக்களங்கள் பரிசோதனை செய்து, அதற்கான அனுமதியை வழங்கி நாங்கள் அகழ்வுப் பணியினை மேற்கொண்டு வருகிறோம்.
ஒவ்வொரு கல்குவாரியிலும் 10க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். இவ்வாறு மொத்தமாக 300க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களது வாழ்வாதாரமே இந்த அகழ்வுப் பணிதான்.
நாங்கள் ஏற்கனவே வழங்கிய அனுமதியை புதுப்பித்துத் தருமாறு முறைப்படி விண்ணப்பித்தோம். ஆனால், எங்களுக்கு சட்டப்படி ஆவணங்கள் இருந்தும் வியாழேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியும் என பிரதேச செயலாளர் கூறி, அனுமதியை புதுப்பிக்க மறுத்து வருகிறார்.
இராஜாங்க அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றால் இதில் யார் அதிகாரி?
அரசியல் ரீதியாகவா அல்லது பேரம் பேசுவதற்காகவா அமைச்சரை சந்திக்க வேண்டும்?
எனவே, இவ்வளவு காலமும் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் அரசியல் இருந்ததே இல்லை. இம்முறைதான் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
எங்கள் பிரதேசத்தில் அபிவிருத்திக் குழு என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவருக்கு ஏற்ற மாதிரி அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்து வருகின்றார்.
எனவே, இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரச சேவை, அரச சேவையாக இயங்க வேண்டும் என்பதற்காக தீர்வு எட்டும் வரை, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து இருந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.