தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்..!!!
தானியங்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி இந்திய தலைநகர் டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தலைநகர் டெல்லிக்குள் பிரவேசிப்பதற்கான மூன்று வழிகளிலும் முட்கம்பிகள், சீமெந்து தடைகள், தடுப்பரண்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு இந்திய தலைநகர் டெல்லியிலும் ஏனைய வட மாநிலங்களிலும் விவசாயிகளால் வருடக்கணக்காக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்படக் கூடுமென்ற அச்சம் இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2020 போராட்டங்களின் போது ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தமை நினைவுகூரத்தக்கது.
சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை மீள பெறுவதாக அமைச்சர்கள் உறுதியளித்ததையடுத்தே, விவசாயிகள் தமது போராட்டங்களை கைவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தமது ஏனைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென இரண்டு ஆண்டுகளின் பின்னர் விவசாயிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்தியாவின் விவசாய சங்கங்கள் ஆதிக்கம் நிறைந்த வாக்குப்பலத்தைக் கொண்டுள்ளன.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், M.S.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். பஞ்சாப் விவசாயிகள் 10,000 டிராக்டர்களில் தமது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.