மக்களின் போராட்டங்களை ஒடுக்க இணைய சேவைகள் துண்டிப்பு..!!!
மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் கடந்த சில வாரங்களில் இரண்டாவது முறையாகவும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய ஜனாதிபதியால் (Macky Sall) இம்மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பை அடக்கும் நோக்கில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேற்கு ஆபிரிக்காவின் மிக உயர்ந்த ஜனநாயக நாடு என அழைக்கப்படும் செனகலில் ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் அதனை ஒத்திவைக்க அந்நாட்டு ஜனாதிபதி Macky Sall மேற்கொண்ட தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றன.
இம்மாதம் நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தலை, டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.
இதனையடுத்து, நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் ஆரம்பமானதுடன், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக பதிவாகியுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்தவும், மக்களின் கருத்துகளை மட்டுப்படுத்தவும் செனகல் அரசாங்கம் நாட்டில் இணையதள சேவையை முடக்கியுள்ளது.
ஜனாதிபதி தமது இரண்டாவது தவணை பதவிக்காலத்தில் நீடிக்கும் உள்நோக்கத்துடன் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் பிற்போட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செனகலில் ஜனாதிபதி தேர்தல் எந்த சந்தர்ப்பத்திலும் தாமதமடையவில்லை எனவும், ஜனாதிபதி குறித்த தீர்மானத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்நாட்டின் சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு ஆபிரிக்காவின் நிலையான ஜனநாயக நாடாக செனகல் பெற்றுள்ள நற்பெயருக்கு இந்த நெருக்கடி களங்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.