Saturday 6 January 2024

தமிழ் எம்.பிகள் ஜனாதிபதியிடம் பேசியது என்ன?

SHARE

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதோடு, கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த முறை எமது பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதும் இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இம்முறையும் ஜனாதிபதியை வரவேற்று நன்றி கூறுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை விவசாயத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், யானை வேலி பராமரிப்பு மற்றும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினறுமான குலசிங்கம் திலீபன்,

வவுனியா மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்பு முதன்முறையாக வனவள திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

அதற்காக ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். வவுனியா மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
அதற்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,

ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடரின் போது மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அவர்களில் இருவரை நீங்கள் விடுவித்துள்ளீர்கள். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம்,

ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சுமார் 12 அரசியல் கைதிகள் இன்னமும் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அல்லது பிணையில் விடுவிக்க விசேட அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

யுத்தம் நிறைவடைந்தாலும் வவுனியாவில் அபிவிருத்திப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார். காணி விடுவிப்புப் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளதால், அதற்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
SHARE