Friday 5 January 2024

ஏழு உயிர்களை பலியெடுத்த சமய சொற்பொழிவு – இன்னும் பல உயிர்கள்…?

SHARE


சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருள் உடலில் கலந்தமையால் தற்கொலை செய்து கொண்ட ருவன் குமார பிரசன்ன குணரத்னவின் விரிவுரைகள் மற்றும் அந்த விரிவுரைகளில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் தற்கொலைக்கு பயன்படுத்திய சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விரிவுரைகளில் கலந்து கொண்ட இளம் பெண் மற்றும் இளைஞன் உட்பட ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

முகநூல், சமூக ஊடகங்கள், விகாரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமய சொற்பொழிவுகளை நிகழ்த்திய ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர் மற்றும் அவரது போதனைகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்ன, அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் மற்றும் அவரது விரிவுரைகளில் கலந்துகொண்ட இரண்டு சீடர்களும் தற்கொலை செய்துகொண்டனர்.

தான் புத்த பெருமானின் சமய உரைகளின் பிரகாரம் வந்தவன் என உரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்ன தனது உரைகளில் மரணம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்வேறு பேச்சுக்களைக் கொடுத்து தன்னைப் பின்பற்றுபவர்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவரது உரையில்;

“.. நாம் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். பின்னர் நாம் மீண்டும் பிறக்கிறோம். மீண்டும் மரணிக்கிறோம், மீண்டும் பிறக்கிறோம்.. அதுதான் நியதி. அதாவது நாம் எல்லோரும் மரணிக்க வேண்டியவர்கள். இப்போ நாம் மரணிப்பது அவசரமான குழப்பத்திலா? அல்லது மிகவும் நிதானமாக சுதந்திரமாக திட்டமிட்டா? எமது இறுதியை எமக்கு முகாமைத்துவம் செய்ய முடியாது போனால், எம்மை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? ..”

இந்த விரிவுரையின் இரண்டு நாட்களுக்குப் பிறகு, ருவன் குமார குணரத்ன, கொட்டாவ, மகும்புரவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார், மற்றும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மாலம்பே, பிட்டுகல பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்..

குறித்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அம்பலாங்கொட திலகபுர பகுதியைச் சேர்ந்த மொரிஸ் மொஹான் ப்ரீத்தி குமார என்ற 35 வயதுடைய இளைஞன் மற்றும் யக்கல – ரபல்வத்த பகுதியைச் சேர்ந்த தினிதி மந்தாகினி என்ற 21 வயதுடைய பல்கலைக்கழக பட்டதாரியும் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஏழு மரணங்களும் சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்களை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்னவே அந்தப் பொருட்களை அவர்களுக்கு வழங்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் கருதுகின்றனர்.

ருவன் பிரசன்ன பிரதான வைத்தியசாலையொன்றின் ஆய்வகத்தில் பணிபுரிந்ததாகவும், அங்கு அவர் இந்த இரசாயனங்களை தயாரித்துள்ளதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரசாயனங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், தற்கொலை செய்து கொண்ட மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் உடல் உறுப்புகள், தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளம்பெண்ணின் இரத்த மாதிரிகள் ஆகியவை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, யக்கல பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இருபத்தி ஆறாம் திகதி ஹபராதுவ பிரதேசத்தில் மஹரகம விடுதியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞனுடன் இடம்பெற்ற விரிவுரையில் குறித்த யுவதி கலந்து கொண்டதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, மஹரகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.

அவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட ருவான் பிரசன்ன தனது ஆசிரியர் எனத் தெரிவித்திருந்தார்.

அவர் தன்னை பின்பற்றுபவர் என்றும், தானும் ஏதோ ஒரு தியானத்தில் ஈடுபட்டதாகவும் பொலிசாரிடம் கூறியிருந்தார்.

தீவிரவாத சிந்தனைகளை ஊக்குவிப்பதாக சந்தேகிக்கப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன தனது பிள்ளைகள் இருவரை ஒன்றரை வருடங்களாக பாடசாலைக்கு அனுப்பாமல் தனது போதனைக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அநுராதபுரம், காலி, குருநாகல் உள்ளிட்ட பல பிரதேசங்களில் விரிவுரைகளை ஆற்றியுள்ள அவர், இதுவரை அந்த விரிவுரைகளில் கலந்து கொண்ட இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் பிக்கு ஒருவர் உட்பட ஆறு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரைப் பின்தொடர்பவர்களில், யக்கல பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது யுவதியின் சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ருவன் பிரசன்ன குணரத்னவின் சீடரான நாவல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தியான செயற்பாடு ஒன்றுக்கு 60 இலட்சம் ரூபாவை அவருக்கு வழங்கியுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமய தத்துவ விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக கூறப்படும் திம்புலாகலை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை விஷம் அருந்தியதால் தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சமய தத்துவ விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் நுவரகலைச் சேர்ந்த சுமார் ஐந்து பேர் அவரது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளதாக விசாரணைகள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் விரிவுரைகளில் பங்கேற்றாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என சிறிபுர பொலிஸார் கூறுவதுடன், இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெண் ஒருவர் அப்பகுதியின் மத தத்துவத்தை பரப்பும் விரிவுரைகள் பலவற்றினை ஆற்றிவருவதாகவும் கூறப்படுகின்றது.

விரிவுரைகளை வழங்கியதாகக் கூறப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன, தெஹியத்தகண்டி பொலிஸ் கான்ஸ்டபிளுக்குச் சொந்தமான வீட்டில் சுமார் ஆறு வருடங்களாக வாடகைக்கு தங்கியிருந்தமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமய தத்துவ விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் விரிவுரைகளில் கலந்து கொண்ட பலர் பொலன்னறுவையின் பல பிரதேசங்களில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு புலனாய்வு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்த விரிவுரைகளில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சமூக அவலநிலை குறித்து திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப திம்புலாகல ராகுலலங்கார பீடாதிபதியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. மனித உயிரின் மதிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்த மதத் தத்துவமும் கொலையையோ தற்கொலையையோ மன்னிப்பதில்லை.

அண்மைக்காலமாக இலங்கையில் பல்வேறு மதக் கருத்துக்களைக் கொண்ட பல்வேறு மதத் தீவிரவாதிகள் பல்வேறு தீவிரவாத போதனைகளை பின்பற்றுபவர்களை தூண்டிவிட்டு தமது மதவெறிக் கருத்துக்களை நிறைவேற்ற முயல்வதாகத் தெரிகிறது.

அதற்கு சிறந்த உதாரணம் ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் தீவிரவாத போதனைகள். அண்மைக்காலமாக தனது பிரசங்கங்களின் ஊடாக தன்னைப் பின்பற்றுபவர்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு அல்லது இவ்வுலகை விட்டுச் சென்று சிறந்த எதிர்காலத்தைப் பெறுமாறு தூண்டிவிட்டு இதுவரையில் தனது முழுக் குடும்பம் உட்பட 07 பின்தொடர்பவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பௌத்தத்தில் தற்கொலை என்பது உயிர்க்கொலையாகவே கருதப்படுகிறது. தற்கொலை என்பது கொலைக்கு சமம். எனவேதான் இத்தருணத்தில் அவரது சொற்பொழிவுகளில் கலந்து கொண்ட அனைவரும், பொது மக்கள் அனைவரும் மதவெறியர்களின் மூடநம்பிக்கை போதனைகளை விட்டொழித்து மனித வாழ்வின் மதிப்பை உணர்ந்து புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் என நினைவூட்டப்பட்டு வருகிறது…” எனத் தெரிவித்திருந்தார்.

SHARE