Friday 12 January 2024

கப்பல் சேவையை நடத்துவதிலேயே இத்துணை இழுபறி என்றால்...

SHARE

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்குமிடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட கையோடு தடைப்பட்டிருந்தது.

மீண்டும் மேற்குறித்த கப்பல் சேவையை 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக குறித்த கப்பல் கம்பனியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மேற்குறித்த கப்பல் சேவை தடைப்படுவதற்கு பயணிகள் பற்றாக்குறையே காரணம் எனக் கூறப்பட்டது.

பின்னர் மழைகாலம் ஆரம்பித்துவிட்டதென்ற காலநிலை மாற்றத்தை முன்வைத்து கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இப்போது மீண்டும் கப்பல் சேவையை நடத்துவது எந்தளவு தூரம் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

ஆம், காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை என்பது குறைந்த கட்டணத்தோடும் கூடிய நிறையில் பொருட்களை எடுத்து வருவதற்கும் உதவும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

ஆனால் கப்பல் சேவையை ஆரம்பித்த போது அதற்கான கட்டணம் விமான சேவைக் கட்டணத்தோடு நெருக்கமாக இருந்ததுடன் எடுத்துவரக்கூடிய பொதியின் நிறையும் மிகக் குறைவாக இருந்தது.

இதுதவிர, பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் அடிக்கடி திகதிகள் மாற்றப்பட்டன.

இவை காரணமாகவே கப்பல் போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறையாக இருந்தது.

உண்மையில் யாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் கப்பல் சேவையை நடத்தும்போது அதன் ஆரம்ப கட்டத்தில் போக்குவரத்துக் கட்டணம் மிகக் குறைவாக இருப்பதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் எடுத்துவரக்கூடிய பொருட்களின் எடை கணிசமானதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் மேற்குறிப்பிட்ட எதுவும் பின்பற்றப்படாமல், எடுத்த எடுப்பிலேயே போக்குவரத்துக் கட்டணம் உயர்வாகத் தீர்மானிக்கப்பட்டதைப் பார்க்கும்போது, குறித்த கப்பல் சேவையை நிறுத்துவதற்கான ஏற்பாடோ
இது என்று எண்ணத் தோன்றும்.

ஆம், யாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்துக்கு மிடையிலான கப்பல் சேவையை கொழும்பு ஒருபோதும் விரும்பமாட்டாது.

தவிர, தென்பகுதி வர்த்தகர்களும் நம் வடபகுதியில் ஒரு தரப்பு வர்த்தகர்களும் குறித்த கப்பல் சேவையை விரும்பவில்லை.

ஆக, சாதாரண மக்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பம் கிடைப்பதை பெருமட்டங்கள் விரும்பமாட்டார்கள் என்பது நிறுத்திட்டமான உண்மை.

இந்த அடிப்படையிலேயே கப்பல் சேவை சேடம் இழுக்கிறது என்பதுதான் வெளிப்படாத உண்மை.

வலம்புரி
ஆசிரியர் தலையங்கம்
12.01.2024
SHARE