Monday 8 January 2024

கன்னி அமர்வுகளுடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்..!!!

SHARE

2024 ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க்கிழமை (9) ஆரம்பிக்கப்பட உள்ளன. தொடர்ந்தும் நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், குறுகிய காலத்துக்கு பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வார இறுதியில் இரு வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்க உள்ளதுடன், நாடு திரும்பியதும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார்.

உத்தேச ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளும் பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகள் மத்தியிலும் பரவலாக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு என்றாலும் எந்த தேர்தல் முதலில் இடம்பெறும் என்பதில் அனைத்து கட்சிகளுமே தெளிவற்ற நிலையிலேயே உள்ளன. ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என்று ஆளும் கட்சியின் ஒரு தரப்பினர் கூறினாலும் மற்றத்தரப்பு பாராளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து கருத்துக்களை கூறி வருகின்றது.

மறுப்புறம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் பிரதான கட்சிகளின் அரசியல் மேடைகளில் பேசப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி ரணில், வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றவுள்ள இவ்வருடத்திற்கான கன்னி அமர்வுகளுடன் பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளார்.

அனைத்துலக பொருளாதார மாநாடு மற்றும் அணிசேரா நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாரம் இறுதியில் சுவிஸர்லாந்து மற்றும் உகண்டா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றார். இந்த நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியதும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவர் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
SHARE