Friday, 22 December 2023

யாழில் மருத்துவத்துறைக்கு தனது உடலை கொடுக்க சொல்லி உயிர்விட்ட பெரியவர்..!!!

SHARE

யாழ் நுணாவிலையை வசிப்பிடமாக கொண்ட செல்லையா தம்பிராசா என்பவரே தனது உடலை மருத்துவ மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தானமாக வழங்கியுள்ளார்.

இவர் நாவற்குழியை பிறப்பிடமாகவும் நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தம்பிராசா இயற்கையிலேயே பார்வையை இழந்த ஒருவர்.

இருப்பினும் தனது அயராத முயற்சியால் சுய தொழில் முனைவராக தன்னுடைய இறுதிக் காலம் வரை வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முதலாக சீதுவைக்குச் சென்று பார்வையற்றவர்களுக்காக நடத்தப்பட்ட கதிரை பின்னும் பயிற்சி நெறியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்து கதிரை பின்னும் தொழிலை ஆரம்பித்ததோடு மட்டுமல்லாது இங்கிருந்த பல பார்வையற்ற இளைஞர்களுக்கு கதிரை பின்னும் தொழிலினை பயிற்றுவித்து அவர்களையும் தொழில் முனைவோராக உருவாக்கிய பெருமை இவரை சாரும்.

யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

அதுமட்டுமன்றி ஆரம்ப காலங்களில் இருந்தே தென்மராட்சியில் தமிழரசு கட்சியின் பிரச்சார நிகழ்வுகளில் இவர் இல்லாத மேடைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழரசு கட்சியின் அர்ப்பணிப்பு உள்ள ஒரு பிரச்சாரியாக இருந்துள்ளார்.

மிகுந்த இறை நம்பிக்கையும் கர்நாடக இசை மீது அதீத கேள்வி ஞானத்தோடு கூடிய ஈடுபாடும் உடைய தம்பிராசா இப்பொழுது அருகி வருகின்ற ஓதுவார் எனப்படுகின்ற பணியினையும் தன் இறுதிக் காலம் வரை செய்து வந்த இவர் தனது 93 வயதில் 19.12.2023 அன்று வினாசித்தம்பி வீதி சாவகச்சேரியிலுள்ள அவரது மகனின் இல்லத்தில் இறையடி சேர்ந்துள்ளார்.

அவர் தன் சுய விருப்பின் பேரில் தனது உடலை மருத்துவ மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தானமாக வழங்கியுள்ளார்.

அவரது உடல் அன்றே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தன்னுடைய பிறப்பிற்கான பலனாக தனக்கு தெரிந்த அறிவையும் , ஞானத்தையும் தன்னோடு வைத்திருக்காது மற்றவருக்கு புகட்டும் ஆசானாகவும், ஆலயமெங்கும் இறை புகழை பாடும் ஒரு தொண்டனாகவும் , இறக்கும் வரையிலும் தன் மீது கொண்ட அதீத நம்பிக்கையோடு என் வேலைகள் அனைத்தும் நானே செய்வேன் என்ற ஓர்மத்தோடும் வாழ்ந்து சென்றுள்ளார்.
SHARE