கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா..!!!
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்தும் வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்று(06) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சிறப்புற நடைபெற்றது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்க தலைவர் கலாபூஷணம் வே. இறைபிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பண்பாட்டுப்பவனி கிளிநொச்சி காக்காகடைச் சந்தியிலிருந்தும் அதேவேளை ஊர்திப் பவனி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து ஆரம்பமாகி விழா மண்டபத்தை வந்தடைந்தது.
இதன்போது கரைச்சி பிரதேச சபைக்கு முன் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் உருவச் சிலைக்கு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் மாலை அணிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, கிளிநொச்சி திறன்விருத்தி மண்டபத்தில் பாரம்பரியப் பொருள்களின் கண்காட்சி அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டு பார்வையிடப்பட்டது. மேலும் குறித்த காண்பியக்கூடக் கண்காட்சியானது இன்றும் நாளையும்(07) தொடர்ந்து நடைபெறவுள்ளது.
மேலும், "அமரர் கலாபூஷணம் அப்பச்சி வல்லிபுரம் அரங்கில் அரங்க நிகழ்வுகள் சிறப்புற ஆரம்பமானது. அரங்கத் திறப்புரையினை கலாபூஷணம் சிவ ஏழுமலைப்பிள்ளை நிகழ்த்தினார்.
தொடர்ந்து, "வடந்தை" எனும் நூல் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகள், சிறந்த நூற்பரிசு வழங்குதல், கலைக்குரிசில் விருது வழங்குதல், இளங்கலைஞர் விருது வழங்குதல், அதிதிகளின் உரைகள் முதலான பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.
இந் நிகழ்வில் சமய தலைவர்கள், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தகள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பல்வேறுபட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தகள், திணைக்கள உத்தியோகத்தர்கள், பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.