Sunday 24 December 2023

சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு..!!!

SHARE

மலேசியாவில் கடந்த 03.12.2023 நடைபெற்ற UCMAS சர்வதேச மனக்கணிதப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற யாழ்.திருநெல்வேலி UCMAS இல் பயிலும் 19 மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு நேற்று (23) பிற்பகல் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

UCMAS இயக்குநர் திருமதி றாதை பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இயக்குநர் றாதை பாஸ்கரன் தலைமை உரையாற்ற, யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மனக்கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இயக்குநர் றாதை பாஸ்கரன் தலைமை உரையாற்றிய போது,

சர்வதேச அளவில் இடம்பெற்ற UCMAS மனக்கணிதப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவப்படுத்தும் இந் நிகழ்வானது, சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் திருநெல்வேலி UCMAS கிளையின் இயக்குநர் என்ற வகையில், எமது கிளையின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.

மலேசியாவை தலைமை செயலகமாகக் கொண்ட UCMAS மனக்கணித நிறுவனம் இலங்கையில் 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவப்பட்டது. அதே ஆண்டில் யாழ் குடாநாட்டில் UCMAS கிளைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, முதலாவது கிளை திருநெல்வேலியில் 60 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக குடாநாட்டில் 7 கிளைகளை UCMAS நிறுவியது.

ஆரம்பத்தில் UCMAS தொடர்பான விழிப்புணர்வு வெறுமனே கணித பயிற்சி நெறி என்ற மட்டத்திலேயே காணப்பட்டது.
2005 ஆம் ஆண்டு ஆவணி மாதம் UCMAS இன் முதலாவது தேசிய மட்ட மனக்கணிதப் போட்டி சுகத்தாஸ உள்ளரங்கில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற்றது. இப்போட்டியில் எமது திருநெல்வேலி கிளையில் இருந்து 60 பேர் பங்குபற்றியதோடு தேசிய மட்டத்திலான அதியுயர் வெற்றிகளை தமதாக்கிக்கொண்டனர்.

2006 ஆம் ஆண்டு எமது நாட்டில் ஏற்பட்ட கடுமையான போர்ச்சூழல் காரணமாக யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப்பாதை முழுமையாக தடைசெய்யப்பட்டதோடு, பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ள நேரிட்டது. இக்கட்டான காலப்பகுதியில் குடாநாட்டில் நிறுவப்பட்ட UCMAS இன் 6 கிளைகளும் உடனடியாக மூடப்பட்டது. ஆனால் திருநெல்வேலி கிளை மட்டும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, குறித்த பயிற்சி நெறிக்கான புத்தகங்கள், உபகரணங்கள் அனைத்தும் பெரும் பணச்செலவுகளுக்கும் மத்தியில் கொழும்பிலிருந்து வான் வழியாக கொண்டு வரப்பட்டு தொடர்ச்சியாக தனது பணியினை முன்னெடுத்தது.

இன்று எமது திருநெல்வேலி கிளை 18 வது வருடத்தில் 250 ற்கு மேற்பட்ட மாணவர்களுடன் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. 2010ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பிற்பாடு எமது
மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்ட போட்டிகளிலும் (National and International Competitions), சர்வதேச தர பரீட்சைகளிலும் (International Grading Exam) பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியது.

குறிப்பாக, 2010 தொடக்கம் 2023 ம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய மட்டப்போட்டியில் "8 நிமிடத்திற்குள் 200 கணக்குகள்” என்பதனை குறிக்கோளாகக் கொண்டு மாணவர்கள் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டு அதியுயர் வெற்றிகளை பெற்று வருகின்றனர். மேலும், இவ்வருடம் ஆவணி மாதம் BMICH இல் நடைபெற்ற UCMAS மனக்கணிதப்போட்டியில் 1800 மாணவர்களுக்கு மேல் பங்குபற்றி இருந்தனர். அதில் திருநெல்வேலி UCMAS கிளையில் இருந்து 137 மாணவர்கள் பங்குபற்றியதோடு, 5 Grand Champions, 4 National Champions, மற்றும் அனைத்து மாணவர்களும் Runnerups மற்றும் Merits பரிசுகளையும் பெற்று எமது கிளைக்கும் எமது மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

2010ம் ஆண்டு தொடக்கம் 2023 வரையில் மலேசியாவிலிருக்கும் எமது தலைமை செயலகத்தால் ஒழுங்கு செய்யப்படும் சர்வதேச தர பரீட்சைகளை முழுமையாக பூர்த்தியாக்கி இலங்கையிலேயே 120 மாணவர்களுக்கு மேல் மனக்கணித பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை எமது கிளைக்கேயுள்ளது. மலேசியாவிலிருக்கும் எமது தலைமை செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்படும் சர்வதேச UCMAS மனக்கணித போட்டிகளில் 2013ஆம் ஆண்டு முதல் எமது மாணவர்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகின.

2013 - Kuala Lumpur, Malaysia
2015 – New Delhi, India
2016 - Dubai
2017 மற்றும் 2018 – Malaysia
2019 - Cambodia
2023 – Kuala Lumpur, Malaysia
ஆகிய நாடுகளில் எமது கிளை தொடர்ச்சியாக 7 வருடங்களில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிகளில் இலங்கை சார்பாக திருநெல்வேலி கிளையிலிருந்து பல மாணவர்கள் போட்டியிட்டு அதியுயர் வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

குறிப்பாக இவ்வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி மலேசியாவில் இடம்பெற்ற மனக்கணித போட்டிக்காக இலங்கையிலிருந்து 62 மாணவர்கள் பங்குபற்றியதோடு எமது திருநெல்வேலி கிளையிலிருந்து 19 மாணவர்கள் பங்குபற்றினார்கள். வெற்றியும் பெற்றார்கள்.

2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டி இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. அதற்கான மாணவ அணியையும் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2020ம் ஆண்டு முதல் இலங்கை UCMAS
இன் CEO ஆக பதவியேற்ற மதிப்பிற்குரிய திரு. விஜேய் சிவசங்கர் அவர்கள் பல்வேறு முன்னேற்றகரமான விடயங்களை உள்வாங்கி UCMAS நிறுவனத்தின் குறிக்கோள்களை மிகவும் உத்வேகத்துடன் சர்வதேச மற்றும் தேசிய ரீதியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தருணத்தில், அவருக்குரிய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இறுதியாக, சர்வதேச மனக்கணித போட்டியில் வெற்றி பெற்று எமது நாட்டிற்கும் எமது மண்ணிற்கும் பெருமை சேர்த்த என் மாணவ செல்வங்களை பாராட்டுவதோடு, அவர்களது எதிர்காலம் வளமாக அமைய மனதார
வாழ்த்துகின்றேன். அத்துடன் சர்வதேச போட்டிகளுக்காக பிள்ளைகளை தமது பாரிய அர்பணிப்புடன் வழிநடத்திய பொற்றோர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், எனது பணியை சிறப்பாக முன்னெடுப்பதற்கு என்றென்றும் துணை நிற்கும் எனது திருநெல்வேலி UCMAS இல் பணியாற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும், எனது குடும்பத்துக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.








SHARE