Monday, 4 December 2023

தெல்லிப்பழையில் வாள் வெட்டு : இளைஞர் படுகாயம்: வாள்வெட்டுக் குழு மீது பொலீஸார் சுட்டும் பலன் இல்லை..!!!

SHARE



யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழுவின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள் வெட்டுக் குழு மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்ட போதிலும், அவர்கள் லாவகமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 5:30 மணியளவில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டு குழுவினரைப் பார்த்துப் பயந்தடித்துத் தப்பித்து செல்ல முயன்றுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது ஹயஸ் வானில் வந்தவர்கள் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு மல்லாகப் பக்கமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நேரத்தில் பொலிஸ் நிலையம் முன்பாகக் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாள்வெட்டு குழுவை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஹயஸ் வானில் வந்த வாள் வெட்டுக் குழு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE